×

திருப்புத்தூர் அருகே மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்: 40 பேர் காயம்

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே நெடுமறத்தில் நேற்று நடந்த மஞ்சுவிரட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 40 பேர் காயமடைந்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே நெடுமறம் மலையரசி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழாவை, நேற்று முதல்கட்டமாக ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் 117 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.

தொடர்ந்து மஞ்சு விரட்டு நடந்தது. முன்னதாக திருப்புத்தூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருந்து சுமார் 600க்கும் மேற்பட்ட மஞ்சுவிரட்டு காளைகள் அலங்கரித்து மாலை, துண்டு கட்டி கொண்டுவந்து காலை 11 மணியளவில் நெடுமறம் பகுதியில் உள்ள கண்மாய் பகுதி மற்றும் வயல் பகுதிகளில் உள்ளிட்ட இடங்களில் கட்டுமாடுகளாக ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டன. இதில் ஏராளமான வீரர்கள் பங்கேற்று மாடுகளை பிடித்தனர். இந்த மாடு முட்டியதில் 35 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இவர்களுக்கு மஞ்சுவிரட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த அவசர சிகிச்சை மையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

காளைகள் முட்டியதில் படுகாயமடைந்த 5 பேர் மேல் சிகிச்சைக்காக திருப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மஞ்சுவிரட்டுக்கான ஏற்பாடுகளை நெடுமறம், ஊர்குளத்தான்பட்டி, என்.புதூர், உடையநாதபுரம், சில்லாம்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர். இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் குன்று மீது அமர்ந்தும் மஞ்சுவிரட்டை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

Tags : Manjuvirat ,Tiruputhur , Bulls rampage in Manjuvirat near Tiruputhur: 40 injured
× RELATED மஞ்சுவிரட்டு நடத்திய 6 பேர் மீது வழக்கு