×

துவங்கியது சீசன்: ஆந்திராவிற்கு பயணமாகும் ஆயக்குடி கொய்யா

பழநி: சீசன் துவங்கியதன் காரணமாக பழநி அருகே ஆயக்குடியில் விளைவிக்கப்படும் கொய்யா ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. பழநி அருகே ஆயக்குடியில் கொய்யா, மா, நெல்லி, சப்போட்டா போன்ற தோட்டக்கலை பயிர்களை அதிகளவில் பயிரிடப்படுகின்றன. இங்கு விளைவிக்கப்படும் மா மற்றும் கொய்யா போன்றவை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற வெளிமாநிலங்களுக்கும் அதிகளவு கொண்டு செல்லப்படுகின்றன. தற்போது ஆயக்குடியில் கொய்யா சீசன் துவங்கி உள்ளது. காய்ப்புகள் துவங்கி உள்ளதால் ஆயக்குடி சந்தை களைகட்டி உள்ளது.

அதிகாலை 5 மணிக்கு துவங்கும் சந்தை காலை 9 மணி வரை நடைபெறுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர். 24 கிலோ கொண்ட 1 பெட்டி கொய்யா ரூ.600 துவங்கி ரூ.800 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் கொய்யா பெட்டி ரூ.1200 வரை விற்பனையானது. வரத்து அதிகரிப்பின் காரணமாக கொய்யா விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இடைத்தரகர் கமிஷன் மற்றும் போக்குவரத்து செலவினங்கள் குறைந்தால் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். எனவே தமிழக அரசு, பழநி பகுதியிலேயே கொய்யா பழச்சாறு தொழிற்சாலை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Ayakudi ,Guava ,Andhra Pradesh , Season Begins: Ayakudi Guava Travels to Andhra Pradesh
× RELATED ஆயக்குடி கொய்யாவிற்கு புவிசார்...