வீட்டு வசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்ட இடங்களில் கட்டிடம் கட்ட தடையின்மை சான்று: பேரவையில் மதுரவாயல் எம்எல்ஏ கணபதி வலியுறுத்தல்

சென்னை: சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது மதுரவாயல் திமுக எம்எல்ஏ க.கணபதி பேசுகையில், ‘சட்டமன்ற தொகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தினால்  கையகப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி பெற  தடையின்மைச் சான்று வழங்க அரசு முன்வருமா’ என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் முத்துசாமி பேசுகையில், ‘வீட்டு வசதி வாரியத்தால் எடுக்கப்பட்டு, முழுமையான தொகைகள்  உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்தால் அந்த இடத்தை நாம் தனியாருக்குக்  கொடுப்பது என்பது சிரமம்.  எனவே, அவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக தான்  கருதப்படுவார்கள்.  எனவே, அப்படி வீட்டு வசதி வாரியம் எடுக்காமல்,  அவர்களுக்கு பணம் செலுத்தாமல் இருந்தால், அந்த இடர்பாடுகள் இடையிலே  இருந்தால் அதை நீக்கி கொடுப்பதற்கு வீட்டு வசதி வாரியம் நிச்சயமாக  நடவடிக்கை எடுக்கும்,’ என்றார்.  கணபதி:  மதுரவாயல்  தொகுதிக்குட்பட்ட வளசரவாக்கம், ராமாபுரம், நெற்குன்றம், போரூர் மற்றும்  அனைத்து இடங்களிலும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் திட்டங்கள்  தீட்டப்பட்டு, செயல்படுத்தப்படாத நிலையில், அனைத்து நகர தெருக்களிலும் 95  சதவீத மனைகள் வீடுகள் முறையாக சிஎம்டிஏ, சென்னை மாநகராட்சி மற்றும்  அனைத்து லோக்கல்பாடி மூலமாக 10 சதவீதம் ஓஎஸ்ஆர் கட்டி அனைத்து மனைகளும் கட்டிட அனுமதி பெற்று வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.  95 சதவீதம் கட்டி  முடித்தாகி விட்டது.  அனைத்து வகையான அடிப்படை வசதிகளும் அரசாங்கத்தின்  மூலமாக பெறப்பட்டிருக்கிறது.

எனவே, மிஞ்சியுள்ள 5 சதவீத மனைகள் கட்டட  அனுமதிக்கு செல்லும் போது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் என்ஓசி கேட்கிறார்கள். டிஎன்எச்பியால் சொந்தமாக்கப்பட்டுள்ள பெரிய பரப்புள்ள நிலங்கள்  ஏற்கெனவே பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி நிலங்களை விடுத்து, மீதமுள்ள  உரிமையாளர்கள் பெயரில்  பட்டா உள்ள நிலங்களுக்கு என்ஓசி கேட்காமல் அனுமதி  வழங்க வேண்டும். எங்கள் தொகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் இடங்கள் நிறைய இருக்கின்றன.  அதனை வாடகை  எதுவும் இல்லாமல், மாநராட்சி,  வீட்டு வசதி வாரிய இடங்களை மக்கள் பணி  செய்வதற்கோ, கட்டிடங்கள் கட்டுவதற்கோ,  பல்வேறு பணிகள் செய்வதற்கோ இலவசமாக வழங்க வேண்டும்.  அமைச்சர் முத்துசாமி:  அது நீண்டகாலமாக நிலுவையில் இருக்கிற பிரச்னை என்பதையும் நான்  தெரிவித்து கொள்கிறேன். ஆனால், நிச்சயமாக, முதல்வரின் அதற்கொரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று  எங்களுக்கு ஆய்வில் சொல்லியிருக்கிறார். அதற்கான நடவடிக்கை கண்டிப்பாக  எடுக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories: