அதிகரித்து வரும் மாரடைப்பு மரணங்கள்: காரணங்கள் என்ன தடுக்கும் வழிகள் மருத்துவர் விளக்கம்

தாம்பரம்: உலகம் முழுவதும் அதிகரித்து வரும் மாரடைப்பு மரணங்கள் காரணங்கள் என்ன, தடுக்கும் வழிகள் என்ன என மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார். உலகம் முழுவதும் மனிதர்களின் வாழ்க்கை முறை காலத்திற்கு ஏற்ப மாறி வருகிறது. குறிப்பாக உணவுகளை பொருத்தவரை ஆரோக்கியமற்ற உணவுகளை எடுத்துக்கொள்ளும் நிலை உள்ளது. அதேபோல, தொற்று நோய்கள், சுகாதாரமற்ற சூழ்நிலைகள், தூக்கமின்மை, வேலை நேரம் மாற்றம் என அனைத்தும் மாறிக்கொண்டே வருகிறது. இதுபோன்ற மாற்றங்களினால் மனிதர்கள் பல்வேறு பாதிப்புகளுக்குள்ளாகி வருகின்றனர்.

அதிலும், குறிப்பாக அண்மைக்காலமாக இளம் வயதினருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்படுவது அதிகமாகி வருவதோடு, மாரடைப்பினால் ஏற்படும் மரணங்களும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கபடி விளையாட்டில் ஈடுபட்ட வாலிபர், ஆணழகன் போட்டியில் பங்கேற்ற வாலிபர் உள்ளிட்டோர் மாரடைப்பால் உயிரிழந்தனர். உணவு முறை, வாழ்க்கை முறையில் போதிய விழிப்புணர்வு பொதுமக்களிடம் இல்லாததும் மாரடைப்பு மரணங்களுக்கு ஒரு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

இதயம் என்பது நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் ரத்தத்தை கொண்டு செல்கின்ற ஒரு முக்கியமான உறுப்பு. அவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த இதயத்திற்கு ரத்தம் தேவைப்படுகிறது. இதயத்தில் முக்கியமான குழாய்கள் மூன்று இருக்கும். அதிலிருந்து பல்வேறு வழிகளில் அனைத்து உறுப்புகளுக்கும் ரத்தம் செல்லும். இதில் பிரச்னை என்னவென்றால், வயது ஆக ஆக அதிகமான கொழுப்புகள் சேரும்போது அது ரத்தம் செல்லும் குழாய்களில் கொஞ்சம் கொஞ்சமாக ஒட்டிக்கொண்டு வரும். நாளடைவில் அது அடைப்பாக மாறும். அவ்வாறு அடைப்பாக மாறி அது பெரிதாகும்போது, ஒரு கட்டத்தில் அது வெடித்து ரத்த குழாயை முழுமையாக அடைத்து விடும்.

இதன் வடிவமைப்பு என்பது 90 அல்லது 100 வயதுகளில் நடக்கக்கூடிய ஒன்று. ஆனால் காலப்போக்கில் அது மாறி 60, 70 வயதுகள் என மாறி 50, 40, 30 வயது என குறைந்து கொண்டே வருகிறது. 50 சதவீத மாரடைப்புகள் 50 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ஏற்படுகிறது என்று இந்திய புள்ளி விவரங்களே சொல்கிறது. ஒரு காலத்தில் 45 வயதிற்கு கீழ் மாரடைப்பு ஏற்பட்டால் அதனை ப்ரீ மெச்சூர் ஹார்ட் அட்டாக் என குறிப்பிடுவோம். 45 வயதிற்கு கீழ் மாரடைப்பு ஏற்படுவது அரிதான ஒன்று என்பதால் அவ்வாறு குறிப்பிடுவோம்.

ஆனால், இப்போது 50 சதவீத மாரடைப்புகள் ப்ரீ மெச்சூர் ஹார்ட்அட்டாக் ஆக தான் இருக்கிறது. ஏன் இவ்வாறு அதிகரித்து வருகிறது என்பது குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. இவ்வாறு அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம் தவிர்க்கக்கூடிய சில விஷயங்களை கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதால், தான் ப்ரீ மெச்சூர் ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது. இதற்கு முக்கியமான சில காரணங்கள் உள்ளது.

* புகைப்பழக்கம்

 சிறுவயதில் மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கியமான மற்றும் அதிகப்படியான காரணமாக இருப்பது புகை பிடிக்கும் பழக்கம். புகை பிடிப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது மட்டுமில்லாமல் மாரடைப்பு ஏற்படும்போது உயிரிழக்கும் நிலையும் அதிகளவில் உள்ளது. மாரடைப்பு ஏற்பட்டு அதற்கு சிகிச்சை அளித்து காப்பாற்றி ஸ்டண்ட் வைக்கப்பட்டு அல்லது ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்யப்பட்டு ஏராளமானோர் நலமாக இருக்கின்றனர். இதுபோன்ற வாய்ப்புகள் கூட இல்லாமல் உயிரிழக்கும் நிலைமை புகை பிடிப்பவர்களுக்கு உண்டு. சாதாரணமாக ஒருவருக்கு ஏற்படும் மாரடைப்பை விட புகை பிடிப்பவர்களுக்கு ஏற்படும் மாரடைப்பு பல மடங்கு கடுமையாக இருக்கும்.

* சர்க்கரை வியாதி

 

கட்டுப்படுத்த முடியாமல் உள்ள சக்கரை வியாதியை கட்டுப்பாட்டில் வைத்து கொண்டால் பிரச்னைகள் ஏற்படாமல் இருக்கும். ஆனால், அதனை கட்டுப்பாட்டில் வைக்காமல் மருந்து, மாத்திரைகளை சரியாக எடுத்துக் கொள்ளாமல் கவன குறைவாக இருந்து, கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் சக்கரை அளவு அதிகரித்து அது கொழுப்பாக மாறி அனைத்து குழாய்களிலும் அடைப்பை ஏற்படுத்திக் கொண்டே வரும். அதன்படி அது இதயத்திலும் அடைப்பை ஏற்படுத்தி மாரடைப்பு ஏற்பட செய்யும்.

* ரத்த கொதிப்பு

சக்கரை வியாதியினாலும், ரத்த கொதிப்பினாலும் பிரச்னை என்னவென்றால் இந்த இரண்டு வியாதிகள் குறித்து அறிகுறிகள் எதுவும் இருக்காது, ஆரம்ப காலத்திலேயே நாமாக உடல் பரிசோதனை செய்யும் பட்சத்தில், நமக்கு இந்த வியாதிகள் இருப்பது தெரியவரும். அவ்வாறு பரிசோதனை செய்யாமல் வியாதி இருப்பது நமக்கு தெரியாத பட்சத்தில், அது 5 முதல் 10 ஆண்டுகளுக்கு பின்னால் தான் ஏதாவது பாதிப்புகள் மூலம், நமக்கு வியாதி இருப்பது குறித்து தெரியவரும்.

அதுவரை வியாதி இருப்பதே நமக்கு தெரியாமல் அந்த குறிப்பிட்ட காலத்திற்குள் நமது உடலில் பெரும்பாலான பாதிப்புகள் ஏற்பட்டுவிடும். எனவே, ஆரம்ப காலகட்டத்தில் அதுகுறித்து கண்டறிந்து, அதனை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால் நாம் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும்.  50 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் 50 சதவீத பேருக்கு ரத்த கொதிப்பு இருக்கிறது என இந்திய புள்ளி விவரங்கள் உள்ளது. இதில், கிராமத்தில் வசிப்பவர்களுக்கு 10 சதவீதம், நகர்ப்புறத்தில் வசிப்பவர்களுக்கு 20 சதவீதம் பேருக்கு மட்டுமே ரத்த கொதிப்பு கட்டுப்பாட்டில் உள்ளது. மற்றவர்கள் அனைவருக்கும் கட்டுப்பாட்டு இல்லாமல் ரத்த கொதிப்பு உள்ளது. இதற்கு காரணம் போதுமான விழிப்புணர்வு இல்லாதது, விழிப்புணர்வு இருந்தும் அறிகுறி இல்லாததால் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவது.

* மன அழுத்தம்

 தூக்கமின்மை, நாம் அதிகப்படியான இலக்கை நினைத்து வேலை செய்வது, தூக்கத்தை தவிர்ப்பது உள்ளிட்டவையால் மன அழுத்தம் ஏற்படுகிறது. குறிப்பாக சமீப காலமாக வாழ்க்கை முறை மாற்றம் அதிகரித்து வருகிறது. மென்பொருள் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் பெரும்பாலானோர் இரவு நேரத்தில் கண்விழித்து வேலை செய்து பகலில் தூங்குவது, குறிப்பிட்ட நேரம் வரை தூங்காமல் குறைந்த அளவில் மட்டுமே தூங்குவது உள்ளிட்ட மாற்றங்கள் அதிகரித்து வருகிறது.

அதிலும் குறிப்பாக தற்போதைய காலகட்டத்தில் செல்போன், டேப், லேப்டாப், வைபை என அனைத்தும் அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்றாக இருப்பதால் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்கள் வரை என அனைவரும் அதற்கு அடிமையாகி இரவு முழுவதும் தூங்காமல் அதில் மூழ்கிக் கிடக்கின்றனர். இவ்வாறு இருப்பவர்களுக்கு தூங்கும் நேரம் குறைவதுடன், தூங்கும் நேரத்தை பாதிப்படைய செய்கிறது. இதுபோன்ற தூக்கமின்மை மற்றும் மன அழுத்தத்தினால் மாரடைப்புகள் அதிகரித்து வருகிறது.

* உடல் பருமன்

 அதிகளவில் உணவு சாப்பிடுவது, ஆரோக்கியமற்ற உணவை சாப்பிடுவது, சர்க்கரை அளவு அதிகமாக உள்ள இனிப்புகள், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் சாப்பிடுவது, எண்ணெயில் பொறித்த உணவுகள் சாப்பிடுவது போன்றவற்றால் பெருமளவு பாதிப்பு ஏற்படுகிறது. முந்தைய காலத்தில் ஓட்டல்கள், ரெஸ்டாரண்டுகள் குறைந்த அளவில் மட்டுமே இருக்கும். ஆனால், தற்போதைய காலகட்டத்தில் தெருவுக்கு தெரு விதவிதமான ஓட்டல்கள், ரெஸ்டாரண்டுகள் உள்ளன.

இவ்வாறு இருக்கும் ஓட்டல் மற்றும் ரெஸ்டாரண்டுகளில் பொதுமக்களை கவரும் விதமாக பல்வேறு உணவுகள், பொறித்த உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, நாம் இருக்கும் இடத்திற்கே நாம் ஆசைப்படும் உணவை வரவழைத்து சாப்பிடும் வசதியும் தற்போதைய காலகட்டத்தில் உள்ளது. இவ்வாறு எளிதில் கிடைக்கும் வசதியும் உள்ளது. ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதால் உடல் பருமன் பெரியவர்களுக்கு 2 மடங்கும், சிறியவர்களுக்கும் 3 மடங்கும் அதிகரித்து வருகிறது என்ற புள்ளி விவரங்கள் வேதனையை ஏற்படுத்தும் ஒன்றாக உள்ளது.

இதனால், தற்போதைய காலகட்டத்தில் உள்ள குழந்தைகள் வளர்ந்து வரும்போது 80, 90 வயதுகளில் வரவேண்டிய பிரச்னைகள் 30, 40 வயதில் முதலில் சக்கரை வியாதி வந்து, பின்னர் ரத்த கொதிப்பு வந்து, பின்னர் 5 முதல் 10 ஆண்டுகளில் ஹார்ட் அட்டாக், பிரைன் அட்டாக் போன்றவை வருவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.

* உடற்பயிற்சி

தற்போதைய காலகட்டத்தில் அனைவருக்கும் உடல் உழைப்பு என்பது முற்றிலுமாக குறைந்து விட்டது. முந்தைய காலத்தில் எங்கு செல்ல வேண்டுமென்றாலும் அரசு பேருந்துகள், ரயில்கள் மூலம் செல்வதற்காக நடந்து சென்று, பின்னர் பேருந்துகள் மற்றும் ரயில்களில் பயணம் செய்த நிலை இருந்தது. ஆனால், தற்போதைய காலத்தில் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் என பெருகிவிட்டது. எங்காவது செல்ல வேண்டுமென்றால் வீட்டு வாசலுக்கு காரை வரவழைத்து, அதில் ஏறி செல்லும் நிலை உள்ளது. இதனால் உடல் செயல்பாடுகள் முற்றிலுமாக குறைந்துவிட்டது. உடற்பயிற்சியும் பெரும்பாலானோர் செய்வதில்லை. இந்த ஆறு காரணங்கள் தான் மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள். எனவே, இதுதொடர்பாக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து ரேலா மருத்துவமனையின் மூத்த இதயநோய் நிபுணர் டாக்டர் அசோக்குமார் கூறியதாவது: தற்போதைய காலத்தில் மாரடைப்பு என்பது ஒரு மடங்கு மட்டும்தான். வரும் காலங்களில் இந்த பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. ஏனென்றால் இந்தியாவைப் பொறுத்தவரை இளம் வயதினவர்கள் தான் அதிகளவில் உள்ளனர். வயதானவர்கள் குறைந்த அளவில் மட்டுமே உள்ளனர். இவ்வாறு அதிகளவில் உள்ள இளம் வயதினவர்களின் உடல் பருமன் 3 மடங்கு அதிகரித்துள்ளதால், வரும் காலங்களில் மாரடைப்புகளை அதிகளவில் நாம் சந்திப்போம் என்ற நிலை உள்ளது.

உடற்பயிற்சி செய்வது என்பது மிகவும் ஆரோக்கியமான ஒன்றுதான். அவ்வாறு உடற்பயிற்சியை தினமும் செய்வதுடன் அளவுடன் செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்யும்போது படிப்படியாக செய்ய வேண்டும். எந்த ஒரு உடல் செயல்பாடுகளும் இல்லாமல் திடீரென உடற்பயிற்சி செய்கிறோம் என 1 மணி நேரம், 2 மணி நேரம் என கடுமையாக உடற்பயிற்சி செய்யும்போது, ரத்த கொதிப்பு அதிகரிப்பதோடு மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பலவகையில் வாழ்க்கை முறையை பாதித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கியதில், நுரையீரல் மற்றும் இதயத்தில் ரத்தம் உறைந்து மாரடைப்பு ஏற்பட்டு ஏராளமானோர் இறந்தனர். அதேபோல, வேக்சின் பயன்படுத்திய போதும் சிலருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளனர். இதுபோன்ற மாரடைப்புகள் கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதிப்பு ஏற்பட்ட 2 முதல் 4 வாரங்கள். அதேபோல், வேக்சின் பயன்படுத்திய 2 முதல் 4 வாரங்களில், கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு, 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு பின்னர், சிலர் மாரடைப்பினால் மரணம் அடைந்தால், அதற்கு கண்டிப்பாக அது காரணம் இல்லை.

கொரோனாவால் அனைவரது வாழ்க்கை முறை மாறியது, குறிப்பாக அலுவலகத்திற்கு சென்று வேலை செய்யாமல் வீட்டில் இருந்தபடியே வேலை செய்வது அதிகரித்து விட்டது. இதனால், மனநல பாதிப்பு, மனக்கவலை உள்ளிட்டவை பெருகி ரத்த கொதிப்பு அதிகரித்துவிட்டது. வெளியே சென்று யாரையும் நேரில் சந்தித்து பழகாமல், நாலு சுவருக்குள் வீட்டிலேயே இருந்த படி வேலை செய்வது, சாப்பிடுவது, தூங்குவது என இருப்பதால் தூக்கமின்மை அதிகரித்து ரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி என பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு அது இதய சம்பந்தமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குடும்ப மரபணு ரீதியாக மாரடைப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது. 45 வயதிற்கு முன்பு நமது தந்தை, தாய், தாய்மாமன் என யாருக்காவது மாரடைப்பு ஏற்பட்டிருந்தால் அது நமக்கும் வரக்கூடிய வாய்ப்பு அதிக அளவில் உள்ளது. எனவே அவ்வாறு இருக்கும் பட்சத்தில் நாம் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் பிற மாநிலங்களை விட மாரடைப்புகள் ஏற்படுவது அதிகளவில் உள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது. மரபணுவை மாற்ற முடியாது இருந்தாலும் நாம் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் மூலம் மாரடைப்புகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.  மாரடைப்பு ஏற்பட்டு குணமடைந்தவர்கள் இதயத் துடிப்பு அளவு குறைந்த அளவில் இருந்தால் கடினமான வேலைகளை செய்வதோ பாரம் அதிகமாக உள்ள பொருட்களை தூக்கவோ கூடாது.

சக்கரை வியாதி இருந்து இதயத்தின் மூன்று குழாய்களிலும் அடைப்புகள் ஏற்பட்டிருந்தால் அவர்கள் கண்டிப்பாக ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்து கொள்வது நல்லது. ஏனென்றால் அதன்மூலம் நமது ஆயுள் காலத்தை 15 முதல் 20 ஆண்டுகளுக்கு மேல் அதிகரிக்க முடியும். யாருக்கு எந்த சிகிச்சை தேவை என்பதை சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் முழு பரிசோதனை செய்த பின்னர் அதற்கான சிகிச்சையை முடிவு செய்வார்கள். உணவு முறை என்பது மிகவும் முக்கியமான ஒன்று அதில் முதலில் உணவை நாம் அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும், அவ்வாறு எடுத்துக் கொள்ளும் உணவை ஏனோதானோ என எடுத்துக் கொள்ளாமல் சர்க்கரை அதிகமாக உள்ள இனிப்புகளை தவிர்க்க வேண்டும், காபி, டீ போன்றவற்றிலும் சர்க்கரையை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. பொறித்த உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். ஸ்வீட், சால்ட், சச்ரேட்டட் பேட் ஆகிய மூன்றை தவிர்த்து அதிகப்படியான உணவு எடுக்காமல், அளவான உணவில் கவனமாக, கட்டுப்பாடாக இருந்தால் அது ஆரோக்கியமான உணவு. முடிந்த அளவு அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. அதிகளவில் பொறித்த, வேக வைத்த உணவுகள், மைதா உள்ளிட்டவையை தவிர்த்து விட்டு பிரவுன் ரைஸ், கோதுமை போன்ற ஆரோக்கியமான பொருளை எடுத்துக் கொள்வது நல்லது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* முழு உடல் பரிசோதனை மார்பில் வலி போன்ற அறிகுறி இருப்பவர்கள் உடனடியாக மருத்துவரிடம் சென்று இசிஜி உள்ளிட்ட பரிசோதனைகளை  செய்து கொண்டு மாரடைப்பிற்கு சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். அறிகுறி இல்லாதவர்களும் ஒவ்வொரு ஆண்டும் முழு உடல் பரிசோதனை செய்து கொண்டால் மாரடைப்பு ஏற்படாமல் காத்துக் கொள்வதோடு அதற்கு தேவையான சிகிச்சையும்  முன்கூட்டியே பெற்றுக் கொள்ளலாம்.

* கடுமையான உடற்பயிற்சி கூடாது உடற்பயிற்சி செய்யும்போது  ஸ்டெராய்டு உள்ளிட்ட மருந்துகளை பயன்படுத்துவது முற்றிலும் தவறான ஒரு  செயல். சிலர் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக வரும்போது உடலை கட்டுமஸ்தாக  ஆக்குவதற்கு ஸ்டெராய்டு உபயோகப்படுத்துவது குறித்து தெரியவரும், அது தவறான  ஒரு காரியம். ஆனால் சீக்கிரம் உடலை கட்டுமஸ்தாக ஆக்க வேண்டும் என்ற ஆசையில்  சிலர் தவறான வழிகளில் செல்கின்றனர், அதே பிற்காலத்தில் கடுமையான விளைவுகளை  ஏற்படுத்தும் என்பதை அவர்கள் அறிவதில்லை. இவ்வாறு ஸ்டெராய்டு மருந்துகள்  உபயோகப்படுத்துபவர்களுக்கு சக்கரை வியாதி, ரத்த கொதிப்பு உள்ளிட்டவை  அதிகரிக்கும். எனவே, அதுபோன்ற செயல்களில் யாரும் கண்டிப்பாக ஈடுபடக்கூடாது.

* அறுவை சிகிச்சை இதய பாதிப்பு உள்ளவர்கள் ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்தால் நான்கு வாரத்திற்கு  மட்டுமே ஓய்வில் இருக்க வேண்டியது வரும். அதன் பிறகு இயல்பான வாழ்க்கையில்  எப்போதும் போல சம்பந்தப்பட்ட நபர் செயல்பட முடியும். ஓபன் ஹார்ட் சர்ஜரி  என்பது 1975ம் ஆண்டு முதல் முறை செய்யப்பட்டு தற்போது 45 ஆண்டுகளையும்  கடந்து நல்ல முறையில் தான் செய்யப்பட்டு வருகிறது. ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்யப்பட்ட பெருமானார் இன்றும் நலமுடன் தான் இருக்கிறார்கள், என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

* அறிகுறி  இருக்காது சிலருக்கு அதிகப்படியான பாரத்தை தூக்கும்போது, படிக்கட்டுகள் ஏறும் போது நெஞ்சு அழுத்துவது போன்று  இருக்கும் சிறிது நேரம் ஓய்வெடுத்தால் அது சரியாகிவிடும் என அலட்சியமாக இருப்பர். இதுபோன்ற அறிகுறிகள் இருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட போகிறது  என்பதாகும். இவ்வாறு அறிகுறி ஏற்படுபவர்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள்  ஏனென்றால் மூன்றில் ஒரு பங்கில் மாரடைப்பு ஏற்படுபவர்களுக்கு எந்த ஒரு  அறிகுறியும் இல்லாமல் மாரடைப்பு ஏற்படும்.

Related Stories: