×

நூறு சதவீத இந்தி மொழி அமலாக்க சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும்: தெற்கு ரயில்வேக்கு சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தல்

மதுரை: ‘தமிழ்நாட்டில் நூறு சதவீதம் இந்தி மொழி அமலாக்க சுற்றறிக்கையை தென்னக ரயில்வே பொதுமேலாளர் திரும்பப் பெற வேண்டும்’ என சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தியுள்ளார். மதுரை எம்பி சு.வெங்கடேசன் அறிக்கை: தெற்கு ரயில்வேயின் 169வது அலுவல் மொழி அமலாக்க குழுக்கூட்ட சுற்றறிக்கையில், ‘உடல் நலம் பற்றிய ஒரு வழிகாட்டி நூல் வெளியிடப்பட்டது. அதில், 100 சதவீத இந்தி மொழி அமலாக்கம் தொடர்பான பயிற்சி தரப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. உடல் நலம் போன்று தேச நலம் என்பதையும் கருத்தில் கொண்டு அலுவல் மொழி விதிகளை அங்கு விவரித்து இருக்கலாம். 100 சதவீத இந்தி என்று அலுவல் மொழி விதிகளில் கூறவில்லை.

இதனால்தான் மாநிலங்கள் நான்காக பிரிக்கப்பட்டுள்ளன. எங்கு இந்தி கட்டாயம், எங்கு தெரிவு, எங்கு கட்டாயமில்லை, எங்கு அலுவல் மொழிகளே பொருந்தாது என அமலாக்க விதியில் கூறப்பட்டுள்ளது. இதனை தெற்கு ரயில்வே அலுவல் மொழி ஆய்வுக்குழு அறிந்திருக்க வேண்டும். இதில் நான்காவது வகையில் தமிழ்நாடு வருகிறது. தமிழகத்திற்கு அலுவல் மொழி விதிகளில் இருந்து 100 சதவீதம் விதிவிலக்கு தரப்பட்டுள்ளது. விதிகளில் உள்ளதை விட்டுவிட்டு, உங்கள் மனதில் உள்ள ஆசைகளையெல்லாம் நிறைவேற்ற முயற்சிக்கக்கூடாது.

தெற்கு ரயில்வே தமிழில் செய்ய வேண்டியவை நிறைய இருக்கிறது. எனவே, உடல் நலத்திற்கு எதை சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது? என்று வழிகாட்டல் கூட்டத்தில் தரப்பட்டுள்ளது போல் அலுவல் மொழி விதிகள், ‘எதை செய்ய சொல்லி இருக்கிறது? எதை செய்யக்கூடாது?’ என்பதையும் தெற்கு ரயில்வே தெரிந்து கொள்ள வேண்டும். தெற்கு ரயில்வே பொது மேலாளர் உரிய முறையில் அலுவல் மொழி ஆய்வுக்குழுவை அறிவுறுத்த வேண்டும். அதன் சுற்றறிக்கையை திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : Su Venkatesan ,Southern Railways , 100% Hindi implementation circular to be withdrawn: Su Venkatesan MP urges Southern Railways
× RELATED தென்மாவட்ட மக்களின் கனவு நிறைவேறியது.....