×

அரசு சார்ந்த அனைத்து அலுவலகங்களையும் ஒன்றிணைத்து சோழிங்கநல்லூரில் ஒருங்கிணைந்த அரசு வளாகம்: அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது சோழிங்கநல்லூர் தொகுதி திமுக எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் பேசியதாவது:  சோழிங்கநல்லூர் தொகுதியில் 1.11.96 அன்று கலைஞர் ஆட்சியில் சார்பதிவாளர் அலுவலகம் தனியாக நீலாங்கரையில், முதல் தளத்தில் 1,300 சதுர அடி கொண்ட அலுவலகமாக துவங்கப்பட்டது. இந்த அலுவலம் போதிய இட வசதியில்லாமல் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் நாளொன்றுக்கு 50க்கும் மேற்பட்ட பத்திர பதிவுகள் நடைபெறுகின்றன. இந்த அலுவலகம் ஆண்டொன்றுக்கு ரூ.550 கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் ஈட்டுகின்ற அலுவலகமாக உள்ளது. இதுநாள் வரையில் இந்த அலுவலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவதால், அங்கு வருகிற பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அரசு சொந்த கட்டிடம் கட்டித்தர வேண்டும்.  வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி: பதிவுத்துறையில் தற்போது 100 ஆண்டுகளுக்கு மேலான 150 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு ஏதுவாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் முதற்கட்டமாக 2020-21ம் ஆண்டு 29  அலுவலகத்துக்கும், 2021-22ம் ஆண்டு 50 அலுவலகத்துக்கும் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதியளித்து, அந்த பணிகள் பல்வேறு நிலைகளில் உள்ளன. இந்த நிலையில் உறுப்பினர், நீலாங்கரை சார்பதிவாளர் அலுவலகம் கட்டுவதற்கு தேவையான சுமார் 5,000 சதுர அடி இடம் தேர்வு செய்து கொடுத்தால், புதிய கட்டிடம் கட்டுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

அரவிந்த் ரமேஷ்: சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், கூட்டுறவு கடன் சங்க அலுவலகம், நுகர்வோர் உணவுப் பொருள் ஆணையர் அலுவலகம் போன்ற அரசு சார்ந்த அனைத்து அலுவலகங்களும், மையப் பகுதியான சோழிங்கநல்லூரில் வாடகைக் கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. அந்த பகுதியிலிருக்கின்ற அரசுக்குச் சொந்தமான மேய்க்கால் இடத்தில் ஓர் ஒருங்கிணைந்த அரசு வளாகத்தை உருவாக்கி, அந்த இடத்திலேயே சார்பதிவாளர் அலுவலகத்தையும் அமைத்து, பொதுமக்களுடைய நீண்டநாள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் திமுக ஆட்சியில் சோழிங்கநல்லூர் தொகுதியில் மிகவும் அதிகப்படியான வளர்ச்சி பணிகள் நடைபெறுகிறது என்பதற்கு சான்றாக அந்த ஒருங்கிணைந்த அரசு வளாகத்திற்குள்ளேயே சார்பதிவாளர் அலுவலகத்தையும் கொண்டு வரவேண்டும்.  அமைச்சர் பி.மூர்த்தி: முதல்வரிடம் கலந்துபேசி, நிதிநிலைமைக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.



Tags : Chozhinganallur ,Arvind Ramesh ,MLA , An integrated government campus at Chozinganallur, bringing together all government offices
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...