×

மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு 19 தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் மீண்டும் பேச்சு

சென்னை: ஊதிய உயர்வு தொடர்பாக மின் வாரிய தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் சென்னையில் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. தமிழ்நாடு மின் வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்படும். இந்நிலையில், 2019 டிசம்பர் மாதம் முதல் நிலுவையில் உள்ள ஊதிய உயர்வை விரைந்து வழங்குமாறு தொழிற்சங்கம் சார்பில் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து, தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மின்வாரிய உயரதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. ஆனால், பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படாததால் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பாக மின்வாரிய  தலைவர், மின்வாரிய தொழிற்சங்கங்களுடன் கடந்த ஜனவரி மாதம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் 5 சதவீத ஊதிய உயர்வு, ஊழியர்களின் விகிதப்படி ஊதிய உயர்வு நிர்ணயம், அவுட்சோர்சிங் முறை, நீண்ட நாட்கள் நிரப்பப்படாத காலிப்பணியிடங்களை ரத்து செய்தல், அதிகாரிகளுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு உள்ளிட்ட பரிந்துரைகள் மின்வாரியத்தால்  வழங்கப்பட்டது.  இந்த பரிந்துரைகளை தொழிற்சங்கத்தினர் நிராகரித்தனர்.

இந்நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் ஊதிய நிர்ணய குழுவினர் 19 தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். தொழிற்சங்கங்கள் தரப்பில் குறைந்தபட்சம் 25 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு என்பதை ரத்து செய்துவிட்டு, 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும், மின்வாரிய ஊழியர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யாமல், மின் வாரியம் மூலமாகவே தேர்வு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்த பேச்சுவார்த்தைக்கு பின் தொழிலாளர்களுக்கு சாதகமான முடிவுகள் வரும் என தொழிற்சங்கத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Re-talks with 19 union representatives on wage hike for power board employees
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...