ஸ்ரீஆர்.எம்.ஜெயின் குழுமத்தின் மழலையர் பள்ளி புதிய கட்டிட திறப்பு விழா குழந்தைகளிடம் உங்கள் விருப்பத்தை திணிக்காதீர்கள்: ஐஐடி இயக்குநர் வி.காமகோட்டி வேண்டுகோள்

திருவள்ளூர்: திருவள்ளூர் நகரில் இயங்கிவரும் ஸ்ரீ ஆர்.எம்.ஜெயின் பள்ளிக் குழுமத்தின் மழலையர் பள்ளி வளாக திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்குத் பள்ளி நிர்வாக அறங்காவலர் பீகம்சந்த் ஜெயின் தலைமை தாங்கினார். இயக்குநர் கிஷோர் குமார் ஜெயின் வரவேற்புரையாற்றினார். கல்வி ஆலோசகர் டாக்டர் அஜித்பிரசாத் ஜெயின், முதல்வர்கள் ஜெயஸ்ரீ நாராயணன், சுஜித்ரா ரவீந்தர், துணை முதல்வர் இந்துமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சென்னை ஐஐடி இயக்குநர் முனைவர் வி.காமகோட்டி, பட்டிமன்றப் புகழ் பாரதி பாஸ்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு குத்துவிளக்கை ஏற்றி வைத்து மழலையர் பள்ளி வளாகத்தை திறந்து வைத்தனர்.

அப்போது முனைவர் வி.காமகோட்டி பேசியதாவது, சென்னை ஐஐடி யின் இயக்குநராகப் பொறுப்பேற்றபின் மாணவர்கள் நலன் கருதி இணையவழியில் புறநகர் மாணவர் கலந்தாய்வு மையம் மூலம் மாணவர்களுக்கு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. வாழ்க்கையில் கல்வி தான் முக்கியம். குழந்தைகள் எதை விரும்புகிறார்களோ அதையை செய்யச் சொல்லுங்கள். அதையே படிக்கச் சொல்லுங்கள். குழந்தைகளிடம் உங்கள் விருப்பத்தை திணிக்காதீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

இதனையடுத்து பட்டிமன்றப் புகழ் பாரதி பாஸ்கர் பேசும் போது,  ஆசிரியர், மாணவர், பெற்றோர் என மூவரும் ஒருங்கிணைந்து செயல்படும் போது தான் கற்றல், கற்பித்தல் சிறப்பானதாக அமையும். ஒவ்வொரு குழந்தையும் தனக்கு எதை முடியுமோ அதை கட்டாயம் செய்யும். ஆனால் மற்ற குழந்தைகளோடு ஒப்பிடாதீர்கள் என்றார். இதில் சிபிஎஸ்இ முன்னாள் கல்வி இயக்குநர் ஜி.பாலசுப்ரமணியன், நகர மன்றத் தலைவர் உதயமலர் பாண்டியன் உள்பட பலர்  கலந்து கொண்டனர்.

Related Stories: