×

வரலாற்றில் இல்லாத அளவுக்கு 18.36 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வு ரிசல்ட் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: வரலாற்றில் இல்லாத அளவுக்கு 18.36 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வு ரிசல்ட் நேற்று டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளில் (குரூப் 4 பதவி) அடங்கிய கிராம நிர்வாக அலுவலர் 425 பணியிடம், இளநிலை உதவியாளர்(பிணையமற்றது), இளநிலை உதவியாளர்(பிணையம்), வரிதண்டலர் (கிரேடு 1) ஆகிய பதவிகளில் 4952 பதவிகள், தட்டச்சர் -3311, ஸ்டேனோ தட்டச்சர் 1176 இடங்கள், பண்டக காப்பாளர் ஒரு பதவி என 9865 பணியிடம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இளநிலை உதவியாளர் 64 இடம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் இளநிலை உதவியாளர் 43, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வரிதண்டலர் 69, 7 சுருக்கெழுத்து தட்டச்சர் பதவியிடம் என 252 இடங்கள் உள்பட மொத்தம் 10117 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 30ம் தேதி அறிவித்தது.

தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 28ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. தேர்வு எழுத 10ம் வகுப்பு தேர்ச்சி தான் கல்வி  தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இளநிலை, முதுநிலை பட்டதாரிகள்  உள்பட லட்சக்கணக்கானோர் போட்டி போட்டு தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இதனால், தேர்வு எழுத 22,02,942 விண்ணப்பங்கள்  பெறப்பட்டது. இவ்வளவு பேர் தேர்வுக்கு விண்ணப்பித்தது டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் சாதனையாக கருதப்பட்டது. இவர்களுக்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24ம் தேதி நடந்தது. குரூப் 4 தேர்வு திருவிழா போல நடந்த தேர்வை 18 லட்சத்து 36 ஆயிரத்து 534 பேர் எழுதினர்.

‘தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்ட போது, அக்டோபர் மாதம் ரிசல்ட் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், ரிசல்ட் ெவளியிடவில்லை. ெதாடர்ந்து டிசம்பர் மாதம், பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்று முறையே அறிவிக்கப்பட்டது. ஆனால், அப்போதும் ரிசல்ட் வெளியிடப்படவில்லை. தொடர்ந்து கடந்த மாதம் 14ம் தேதி டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவு தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டது. அதில், ‘‘விடைத்தாட்களின் இருபாகங்களும் தனித்தனியே ஸ்கேன்  செய்து பிழைகள் சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஸ்கேன் செய்ய  வேண்டிய ஓஎம்ஆர் விடைத்தாட்களின் எண்ணிக்கை 36 லட்சத்திற்கும் கூடுதலாக  உள்ளது. ஏறக்குறைய மும்மடங்கு கூடுதலான வேலையாகி உள்ளது. எவ்வித தவறுக்கும் இடம் தராமல் இத்தேர்வு முடிவுகள் வரும் மார்ச் மாதத்தில்  வெளியிடப்படும்” என்றும் அறிவிக்கப்பட்டது.

இருந்த போதிலும் குரூப் 4 தேர்வு முடிந்து 8 மாதம் வரை ஆனது. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ரிசல்ட்டை நேற்று வெளியிட்டது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: குரூப் 4 தேர்வில் காலியாக உள்ள 10,117 இடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வை 18 லட்சத்து 56 ஆயிரத்து 534 பேர் எழுதியிருந்தனர். தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீடு விதி மற்றும் அறிவிக்கையில் வெளியிடப்பட்டுள்ள பிற விதிகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.inல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் வெளியிடப்பட்டுள்ளது.

Tags : TNPSC , Record 18.36 Lakh Candidates for Group 4 Exam Result Released: TNPSC Official Notification
× RELATED சிவில் நீதிபதி நியமன விவகாரம்...