×

மந்தைவெளி மேற்கு வட்ட சாலை ‘டி.எம்.சவுந்தரராஜன்’ சாலையானது: பெயர் பலகையை முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் 1923ம் ஆண்டு மதுரையில் பிறந்தார். 1950ம் ஆண்டு முதல் அரை நூற்றாண்டு காலம் தமிழ்த் திரையுலகில் சிறப்புமிக்க பாடகராக திகழ்ந்த அவர், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் நீங்கா இடம் பிடித்தார். டி.எம்.சவுந்தரராஜனுக்கு கலைஞரால் 1970ம் ஆண்டு ‘ஏழிசை மன்னர்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. 2003ம் ஆண்டு டி.எம்.சவுந்தரராஜன் பத்மஸ்ரீ பட்டமும் பெற்றார். தனது குரல் வளத்தால் மக்கள் மனதில் இடம்பெற்ற டி.எம்.சவுந்தரராஜன் 2013ம் ஆண்டு மறைந்தார்.

இந்நிலையில், பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜனின் புகழுக்கு சிறப்பு சேர்க்கின்ற வகையில், அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சென்னையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள மந்தைவெளி மேற்கு வட்டச் சாலைக்கு,  ‘டி.எம்.சவுந்தரராஜன் சாலை’ எனப் புதிய பெயர் சூட்டப்பட்டது. இந்த சாலையின்  பெயர் பலகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மோகன், டி.எம்.சவுந்தரரராஜனின் மகன்கள் பால்ராஜ், செல்வக்குமார், மகள் மல்லிகா மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். மேலும், அவர் பாடிய புகழ்பெற்றப் பாடல்களை நினைவுகூரும் வகையில், சென்னை, கலைவாணர் அரங்கத்தில் இன்னிசை கச்சேரியும் நேற்று நடந்தது.


Tags : Mantaivela West Circle Road ,Soundararajan' ,Chief Minister , Mantaivela West Circular Road 'TM Soundararajan Road': Chief Minister inaugurates name board
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்