குடிபோதையில் நள்ளிரவில் நண்பனை அடித்து கொன்றுவிட்டு ஏரியில் குதித்து வாலிபர் தற்கொலை: போலீசுக்கு பயந்து விபரீத முடிவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நாராயண பாளைய தெருவை சேர்ந்தவர் துரைசாமி மகன் பிரபாகர் (36). இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை தனியார் பட்டுசேலை கடையில் பணிபுரிந்து வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக எலக்ட்ரீசியன் தொழிலில் ஈடுபட்டு கொண்டே, ஆரணி போன்ற இடங்களில் பட்டுசேலை வாங்கி வந்து விற்பனை செய்தும் வந்துள்ளார். அதேபோல், வாடிக்கையாளர்களின் பழக்கத்தினால் பட்டுசேலை புரோக்கராகவும் இருந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமான சில மாதங்களிலேயே மனைவி பிரிந்து சென்று விட்டதால், தனது பெற்றோருடன் நாராயணபாளையம் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்திம்  நள்ளிரவு, பிள்ளையார் பாளையம் பகுதியில் வசிக்கும்  நண்பர்  பெருமாள் (34) இவர்கள் இருவரும் சேர்ந்து, இந்திரா நகர் பகுதி அருகே, புதிய ரயில் நிலையம் அருகில் ரயில்வே மேம்பாலத்தின்  கீழ் அமர்ந்து மதுபானம் அருந்தி உள்ளனர். அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையில் பெருமாள் அங்கிருந்த கல்லை எடுத்து பிரபாகரை கடுமையாக தாக்கியுள்ளார். அதில், பிரபாகர் தலையில் 2 இடங்களில் பலத்த  காயமடைந்து  சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.மதுபோதையில் இருந்த பெருமாள் காவல் துறையினர் தன்னை எப்படியும் கண்டுபிடித்து விடுவார்கள் என்ற பயத்தில், இந்திரா நகர் பகுதியில் பதுங்கி இருந்தார்.

மறுநாள் அதிகாலையில் காவல் துறையினரின் தேடுதல் வேட்டை அதிகமாகவே அதற்கு பயந்து ரயில்வே மேம்பாலத்தின் மீது ஏறி அருகே உள்ள பொன்னேரி ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று பிற்பகல் ஏரியில் சடலம் மிதப்பதை பார்த்து அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா போலீசார் ஏரியில் மிதந்து கொண்டிருந்த, பெருமாளின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைதொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில் போதைக்கு அடிமையான பெருமாள் மற்றும் பிரபாகர் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் நள்ளிரவு மதுபானம் அருந்தி கொண்டிருந்தபோது, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதில், பெருமாள் அங்கிருந்த கல்லை எடுத்து பிரபாகரனின் தலையில் பலமாக அடித்ததால், பிரபாகர் சம்பவ இடத்திலேயே இறந்து போய்விட்டார். பெருமாள் காலையில் தப்பித்து விடலாம் என்று எண்ணிய நிலையில், இருக்கும்போது காவல்துறையினரின் நடமாட்டத்தை கண்டு எப்படியும் தன்னை பிடித்து விடுவார்கள் என்ற பயத்தில் போதையில் இருந்த பெருமாள் மேம்பாலத்தில் ஏறி பொன்னேரி கரை ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என தெரியவந்தது. குடிபோதையில் நண்பரை கொலை செய்த குற்றவாளி, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: