ராகுல்காந்தியில் பதவி பறிப்புக்கு எதிராக விரைவில் நாடு தழுவிய போராட்டம்: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தில் தலைவர் ராகுல்காந்தி வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக தமிழகத்திலுள்ள காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் எந்தவித தியாகத்தையும் செய்ய தயார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ராகுல்காந்தியின் எம்பி பதவி பறிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள கே.எஸ்.அழகிரி, “கடந்த 2019 ஏப்ரல் 13 ஆம் தேதியன்று மக்களவை தேர்தல் பரப்புரையின் போது கர்நாடக மாநிலம், கோலாரில் நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போது பொதுவாக கூறப்பட்ட ஒரு கருத்தின் அடிப்படையில் குஜராத் மாநிலம் சூரத் குற்றவியல் நீதிமன்றத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் தொடுத்த வழக்கில் தலைவர் ராகுல்காந்தி அவர்களுக்கு இரண்டாண்டு தண்டனை விதிக்கப்பட்டது.

கோலார் பொதுக் கூட்டத்தில் பேசியதற்கு சூரத் நீதிமன்றத்தில்  எப்படி வழக்கு தொடரப்பட்டது என்று தெரியவில்லை. எந்த குறிப்பிட்ட நபரையும் குறித்து பேசாத நிலையில் அவமதிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டது வியப்பாக இருக்கிறது. மேலும், தொடக்கத்தில் நீதிபதியின் முன்பு புகார் அளித்தவரே பல்வேறு மனுக்களை தாக்கல் செய்து வழக்கை நடத்த விடாமல் காலம் தாழ்த்தி வந்தார். பிறகு அந்த குறிப்பிட்ட நீதிபதி மாறுதலான பிறகு புதிய நீதிபதி வந்ததும் வழக்கு வேகமாக விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. மிகமிக சாதாரண விமர்சனமாக கருதப்பட்ட விஷயத்தில் இத்தகைய அதிகபட்சமான தண்டனையை நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.

இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் உள்ள நிலையில் அதே நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்திருக்கிறது. மேல்முறையீடு செய்து தண்டனையை நிறுத்தி வைக்கவும், நீதியை நிலைநாட்டவும் உரிய நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சி எடுத்து வருகிறது. இந்நிலையில் சூரத் நீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாக வைத்து அவசர அவசரமாக ராகுல்காந்தியின் மக்களவை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். சூரத் குற்றவியல் நீதிமன்ற தீர்ப்பின்படி தலைவர் ராகுல்காந்திக்கு அதிகப்படியான இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்த போதே மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்படுகிற சந்தேகம் நிலவியது. அது இப்போது அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

Related Stories: