கர்நாடக இசைப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு மூளையில் ரத்தக் கசிவு அடைந்ததை அடுத்து இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதி!

சென்னை: கர்நாடக இசைப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு மூளையில் ரத்தக் கசிவு அடைந்ததை அடுத்து இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

கர்நாடக இசைப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ, இங்கிலாந்து லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் யோகோ ஓனோ லெனான் மையத்தில் உள்ள டங் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தார்.

அங்கு ஹோட்டலில் தங்கியிருந்த அவர், திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுயநினைவை இழந்ததாக தெரிவித்துள்ளனர்.

பரிசோதனையில் பாம்பே ஜெயஸ்ரீக்கு மூளையில் ரத்த கசிவு இருப்பது தெரியவந்துள்ளது. மூளையில் ரத்தக் கசிவு அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பாம்பே ஜெயஸ்ரீக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

மிகவும் கவலைக்கிடமாக உள்ள அவரது நிலைமை திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பல மொழிகளில் பாடி அசத்தியுள்ள பாம்பே ஜெயஸ்ரீ, மின்னலே தமிழ்த் திரைப்படத்தில் இடம் பெற்ற வசீகரா பாடலின் மூலம் பரவலாக அறியப்பட்டார்.

பொல்லாதவன் படத்தில் இடம்பெற்ற மின்னல்கள் கூத்தாடும் என தொடங்கும் பாடல், வேட்டையாடு விளையாடு படத்தில் பார்த்த முதல் நாளே என்ற பாடல், காக்க காக்க படத்தில் ஒன்றா ரெண்டா ஆசைகள் என்ற பாடல் உள்ளிட்ட ஹிட் பாடல்களை இவர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Related Stories: