திருப்பத்தூர் மாவட்டத்தில் போதைக்கு அடிமையான மாணவர்களை கண்டறிந்து நல்வழிப்படுத்த வேண்டும்-கல்லூரி முதல்வர்களுக்கு எஸ்பி அறிவுரை

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் போதைக்கு அடிமையான மாணவர்களை கண்டறிந்து நல்வழிப்படுத்த வேண்டும் என கல்லூரி முதல்வர்களுக்கு எஸ்பி அறிவுரை வழங்கினார்.

திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில்  கல்லூரி மாணவர்கள் நலன்  குறித்து கல்லூரி முதல்வர்களுக்கு போதை  விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் மாவட்டத்தில் உள்ள 14 கல்லூரிகளை சேர்ந்த முதல்வர்கள் கலந்து கொண்டனர். அப்போது எஸ்பி பாலகிருஷ்ணன் பேசியதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தில்  வாலிபர் ஒருவர் போதையில் கோயில் கண்ணாடி மற்றும் பேருந்து நிலையத்தில் அளவுக்கு அதிகமான போதையில் கண்ணாடிகளை உடைப்பது போல் அட்டகாசத்தில் ஈடுபட்டார். இதுபோல் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற கூடாது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பல்வேறு ஆலோசனைகளை கோரி அவர்களை நல்வழிபடுத்த வேண்டும் மேலும் கல்லூரிகளில் போதை தடுப்பு குழுக்கள் அமைத்து போதையால் இளைஞர்கள் சீரழியும் குறும்படங்களை வெளியிட்டு மாணவர்களை திருத்த நல்வழிப்படுத்த வேண்டும்.

 அதேபோல் கல்லூரி மற்றும் பள்ளி வளா பகுதிகளில் குட்கா, கூல் லிப் போன்ற பொருட்கள் விற்பனை செய்தால் உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கல்லூரிக்கு வரும்போது மாணவர்கள் எப்படி வருகிறார்கள் என்பதை கண்காணிக்க குழுக்கள் அமைத்து, அவர்கள் போதை பொருட்களுக்கு அடிமை ஆகிறார்களா என கண்டறிந்து தெரிவிக்க வேண்டும்.

அப்படி தெரிவித்தால் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி போதை பொருட்களினால் இளைஞர்கள் சீரழிவது எவ்வாறு என்பதை குறித்து விளக்கப்படும். இதே போல் கல்லூரி முதல்வர்களும் இந்த விழிப்புணர்வுகளை அனைத்து கல்லூரிகளிலும் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் ஏடிஎஸ்பி புஷ்பராஜ், டிஎஸ்பி செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: