×

ஆழியார் அணை நீர்மட்டம் 60 அடியாக குறைந்தது குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

ஆனைமலை : பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்தில்(பிஏபி), பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைக்கு, பரம்பிக்குளத்தில் தண்ணீர் திறக்கும் போது கான்டூர் கால்வாய் வழியாகவும். மழை இருக்கும்போது சின்னாறு, நவமலை, குரங்கு அருவி ஆகியவற்றில் இருந்தும் தண்ணீர் வரத்து இருக்கும். இந்த  அணையிலிருந்து, பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன விவசாய பகுதிக்கும் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாட்கள் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

 அதுபோல் கேரளாவுக்கும் ஒவ்வொரு ஆண்டும் ஏழேகால் டிஎம்சி தண்ணீர் அவ்வப்போது திறக்கப்படுகிறது. மேலும், ஆழியாற்றில் திறந்துவிடப்படும் தண்ணீர் பொள்ளாச்சி, குறிச்சி, குனியமுத்தூர் நகராட்சிகள் மற்றும் வழியோர கிராமங்களுக்கும் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. மொத்தம் 120அடி கொண்ட ஆழியார் அணையில், சுமார் 3 ஆயிரத்து 864 மில்லியன் கன அடி வரை தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

 ஒவ்வொரு ஆண்டும் கோடை காலங்களில் பிஏபி.,திட்டத்தில் உள்ள சோலையார், திருமூர்த்தி, பரம்பிக்குளம் உள்ளிட்ட அணைகளில் தண்ணீர் குறைந்து வறட்சியை சந்திக்கும்போது, ஆழியார் அணையில் மட்டும் ஓரளவு தண்ணீர் தேக்கியிருக்கும். இதனால் அந்நேரத்தில் பாசனம் மூலம் விவசாயத்துக்கும், குடிநீர் தேவைக்கும் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு தொடர்திருக்கும்.
 கடந்த 2015 முதல் 2018வரை மழைகுறைவால், சில ஆண்டுகளாக ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து குறைவாக இருந்ததுடன், நீர்மட்டமும் விரைந்து சரிந்துள்ளது. இதில் கடந்த 2022ம் ஆண்டில் ஜூன் முதல் சில மாதமாக தொடர்ந்து பெய்த தென்மேற்கு பருவமழையின்போது, ஆழியார் அணையின் நீர்மட்டம் இரண்டு மாதங்களில் முழு அடியான 120அடியையும் எட்டி, கடல்போல் காணப்பட்டது.

  மேலும், அதே ஆண்டில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் அவ்வப்போது பெய்த வடகிழக்கு பருவமழையினால்,  அணையின் நீர்மட்டம் பல மாதங்களாக சுமார் 110அடிக்கு மேல் இருந்துள்ளது.  அதன்பின், இந்த ஆண்டில்(2023) ஜனவரி மாதம் துவக்கத்திலிருந்து மழையின்றிபோனது. அதே நேரத்தில் வெயிலின் தாக்கம் மெல்லமெல்ல அதிகரிக்க துவங்கி அணைக்கு தண்ணீர் வரத்து குறைய துவங்கியது.

 மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், சில மாதமாக மழை பொய்த்ததுடன், கடந்த சிலவாரமாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வறட்சியானது. இதனால், அணைக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைந்தது. நேற்றைய நிலவரபடி ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 160கன அடியானது. நீர்மட்டம் 60அடியாக குறைந்துள்ளது. ஆழியார் அணையின் நீர்மட்டம் நாளுக்குநாள் குறைந்து வருவதால் அணையின் பெரும்பாலான பகுதி பாறைகள் மற்றும் மணல் மேடான இடமாக தெரிகிறது.

 மேலும், ஆங்காங்கே சேறும் சகதியுமாகவும், சமபாதையாகவும் காணப்படுகிறது. அதிலும், வால்பாறை மலைப்பாதை 9வது கொண்டை ஊசி பகுதியிலிருந்து பார்கும்போது, பல மாதமாக கடல்போல் தண்ணீரால் நிரம்பியிருந்த, ஆழியார் அணையின் மேல் பகுதி, குட்டைபோல் காட்சிளிக்கிறது. சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆழியார் அணை வறண்டது போல், இப்போது மீண்டும் அணைப்பகுதி வறண்டு வருவது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இச்சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால், வரும் நாட்களில் ஆழியார் அணையிலிருந்து பாசனத்துக்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அவலம் உண்டாகும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags : Aliyar Dam , Anaimalai: In the Parambikulam Aliyar Irrigation Project (PAB), when water is released in Parambikulam to Aliyar dam next to Pollachi.
× RELATED ஆழியார் அணையிலிருந்து பழைய ஆயக்கட்டுக்கு மீண்டும் தண்ணீர் திறப்பு