×

ஆகாயத்தாமரை ஆக்கிரமித்து அசுத்தமாக காணப்படுகிறது சுப்புலாபுரம் ஊரணி சுத்தம் செய்யப்படுமா?

*பருவமழை தொடங்குவதற்குள் தூர்வார மக்கள் கோரிக்கை

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே எம்.சுப்புலாபுரம் கிராமத்தில் உள்ள ஊரணியில் கழிவுநீர் கலந்து ஆகாயத் தாமரை வளர்ந்துள்ளதால் சுகாதார கேடு ஏற்பட்டு கிராம மக்கள் தவித்து வருகின்றனர். எனவே பருவமழை தொடங்குவதற்குள் ஊரணியை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆண்டிபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட மரிக்குண்டு ஊராட்சியில் மரிக்குண்டு, அண்ணாநகர், பழனிதேவன்பட்டி, வீரசின்னம்மாள்புரம், எரதிமக்காள்பட்டி, எம்.சுப்புலாபுரம், இந்திராநகர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இதில் எம்.சுப்புலாபுரம் கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வசிப்பவர்களில் பெரும்பாலும் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு அருகில் இருக்கும் கண்மாய் மற்றும் அருகே செல்லும் ஓடை நீர் மூலமாக விவசாய பாசனம் செய்து வருகின்றனர்.

எம்.சுப்புலாபுரம் கிராமத்தின் நுழைவில் ஊரணி அமைந்துள்ளது. இந்த ஊரணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இருந்தது. ஊரணியில் தேங்கும் சுத்தமான தண்ணீரால் அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் குளிக்கவும், துவைப்பதற்கும் பயன்படுத்தி வந்தனர். எம்.சுப்புலாபுரம் கிராமம் மட்டுமல்லாமல் அருகில் இருந்த மரிக்குண்டு, எரதிமக்காள்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்களும் பயன்படுத்தி வந்தனர். இந்த ஊரணியில் தேங்கும் தண்ணீரால் கிராமத்தில் இருந்த கிணறுகளில் சுத்தமான குடிநீர் ஊற்றெடுத்து வந்தது. மேலும் வீடுகளில் போடப்பட்டிருக்கும் ஆழ்துளை கிணற்று போரால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து காணப்பட்டது.

பின்னர் எம்.சுப்புலாபுரம் கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அனைத்தும் கடந்த சில ஆண்டுகளாக கிராமத்தின் சாலையை கடந்து ஊரணியில் விழுந்தது. இதனால் ஊரணியில் இருக்கும் தண்ணீரை யாரும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் ஊரணியை அப்பகுதி மக்கள் பயன்படுத்துவதை தவிர்த்தனர். அந்த ஊரணி அப்படியே கண்டும் காணாமல் இருந்தது. இதனால் கழிவுநீர் நிறைந்து அதில் ஆகாயத் தாமரை அதிகளவு வளர்ந்து காணப்படுகிறது. இதனால் அருகில் உள்ள கிணறுகளில் தண்ணீர் ஊற்றெடுக்கவில்லை. ஆழ்த்துளை கிணற்று தண்ணீரும் சுவை குறைந்து வருகிறது.

மேலும் ஆகாயத் தாமரை அதிகளவு நிறைந்து கிடப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி ஊரணியை சுற்றி வசிப்பவர்களுக்கு பல்வேறு வைரஸ் காய்ச்சல்கள் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்த ஊரணி அருகே பேருந்து நிறுத்தம் உள்ளது. வெளியூர்களுக்கு சென்று வருபவர்கள் அங்கு தான் பேருந்தில் இருந்து இறங்க வேண்டும். கொசு தொல்லையால் மாலை 6 மணிக்கு மேல் அந்த பகுதிகளில் சென்று நிற்பதற்கே சிரமமாக உள்ளது என்று கிராம மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது கோடை வெயில் காலம் தொடங்கியுள்ளது. இந்த நேரத்தில் ஊரணி காய்ந்துபோய் உள்ளது. தற்போது ஊரணியை எளிதாக சுத்தம் செய்யலாம். வரும் ஜூன் மாதத்தில் பருவமழை தொடங்கிவிடும். அதற்குள் ஊரணியை சுத்தம் செய்து கழிவுநீர் சேராமல் தடுத்தால், பருவமழையின் போது சுத்தமான தண்ணீர் ஊரணியில் தேங்கும். இதனால் விவசாயத்திற்கும், கால்நடைகளுக்கும், கிணறுகளுக்கும், நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து மக்களுக்கு சுத்தமான தண்ணீர் கிடைக்கும்.

இதுகுறித்து எம்.சுப்புலாபுரம் கிராம மக்கள் தெரிவிக்கையில், எம்.சுப்புலாபுரம் கிராமத்தில் அனைத்து பகுதிகளிலும் கழிவுநீர் வடிகால் வசதி அமைக்க வேண்டும். மேற்கில் இருந்து வரும் கழிவுநீரை கடத்த வழிவகை செய்ய வேண்டும். இந்த ஊரணியில் மழை காலத்தில் தேங்கும் நீரால் இந்த பகுதிக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது. கழிவுநீர் இருப்பதால் மழையில் கிடைக்கும் நீர் சில மாதத்தில் வற்றி விடுகிறது.

இதனால் சுகாதார கேடு ஏற்படுகிறது. மழைநீர் தேங்கினாலும் அதனை கால்நடைகள் பயன்படுத்த முடியாமல் கெட்டு விடுகிறது. தற்போது வெயில் காலம் தொடங்கியுள்ளதால் ஊரணி வற்றிப்போய் உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஊரணியில் உள்ள ஆகாயத் தாமரையை எளிதில் அகற்றலாம். ஊரணியையும் எளிதில் சுத்தம் செய்யலாம். ஊரணியை சுத்தம் செய்ய ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்ககோரி பல முறை தெரிவித்துள்ளோம். எனவே மாவட்ட நிர்வாகம் அடுத்த பருவமழை பெய்வதற்குள் ஊரணி சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Tags : Agayathamar ,Subbulapuram village , Andipatti: Air lotus has grown in the village of M. Subpulapuram village near Andipatti, causing health problems due to sewage mixed with it.
× RELATED முத்துப்பேட்டை அருகே வளவனாற்றில் கிராம மக்களே ஆகாயத்தாமரை அகற்றினர்