×

கச்சிராயபாளையத்தில் தொடரும் அவலம் அதிகாரிகள் அலட்சியத்தால் பாலம் கட்டும் பணி மந்தம்

* அடிக்கடி விபத்து * போக்குவரத்து பாதிப்பு

சின்னசேலம் : கச்சிராயபாளையத்தில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் பாலம்  கட்டும்பணி மந்தமாக நடப்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், தெரு  சிமெண்ட் சாலைகள் சேதமாகும் அவல நிலை உள்ளது. கச்சிராயபாளையத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கும்,  பழைய பேருந்து  நிலையத்திற்கும் இடையில் உள்ள தரைமட்டபாலம் மிகவும் தாழ்வாக இருந்ததால்,  மழை வெள்ள காலங்களில் இந்த பாசன கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து  வரும்போது இருபுறமும் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்படும்.  இதனால் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து  சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் முயற்சியால் நெடுஞ்சாலைத் துறை  சார்பில் ரூ.1.50 கோடி செலவில் உயர்மட்ட பாலம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு, கட்டுமான பணிகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு துவங்கியது.

இதனால் கள்ளக்குறிச்சி, சின்னசேலத்தில் இருந்து கச்சிராயபாளையம்  பஸ்நிலையத்திற்கு வரும் பேருந்துகள் மற்றும் பள்ளி, கல்லூரி பேருந்துகள்,  வாகனங்கள் அனைத்தும் டேம்ரோடு வழியாக சென்று சிவன் கோயில், அதன் அருகில்  உள்ள சாலையில் சென்று பஸ்நிலையத்தை அடைகிறது. அதே வழியில் பேருந்துகள்  திரும்பி செல்கிறது.  இதனால் சிவன்கோயில் தெரு சாலையில் அடிக்கடி  போக்குவரத்து தடை, விபத்து ஏற்படுவதுடன், அந்த தெருவில் போடப்பட்ட சிமெண்ட்  சாலைகளும் சேதமடைந்து வருகிறது.

ஆனால் பணி தொடங்கி ஒரு  மாதத்திற்கு மேல் ஆகிறது. அடித்தளம் போட பள்ளம் தோண்டிய காங்கிரீட் சுவர்  எழுப்ப ஆரம்பித்ததோடு சரி. அதற்கு பிறகு எந்த பணிகளும் நடக்கவில்லை.  நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் பணி மந்தமாக நடப்பதை ஆய்வு செய்யவில்லை.  அதிகாரிகளும் அலட்சியமாக உள்ளனர். சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டியிருப்பது  தெரியாமல் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் தவறி விழுந்து விபத்து ஏற்படுகிறது.   

இதனால் கச்சிராயபாளையம் பஸ்நிலையத்தில் இருந்து டேம்ரோடு செல்லும் சாலை,  சிவன்கோயில் தெருவில் அடிக்கடி பஸ்போக்குவரத்து தடை ஏற்படுகிறது.  சிவன்கோயில் தெருவில் பேருந்துகள் ஒதுங்க இடம் இல்லாமல் விபத்தும்  ஏற்படுகிறது. இதனால் அந்த தெருவில் வசிக்கும் மக்கள் மிகுந்த அச்சத்துடன்  நடமாடி வருகின்றனர். மேலும் பேருந்துகள் சுற்றி வருவதால் காலநேரம்  விரயமாகிறது.  தற்போது பேருந்துகள் செல்லும் மாற்று வழிப்பாதை  போக்குவரத்திற்கு ஏற்ற சாலை இல்லை.

ஆகையால் மாவட்ட கலெக்டர்  கச்சிராயபாளையம் பகுதி மக்கள், மாணவர்களின் நலன்கருதி பாலம் கட்டும் பணியை  ஆய்வு செய்து, விரைவில் கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள்  கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையெனில்  நெடுஞ்சாலைத்துறை  அதிகாரிகளை கண்டித்து பாதிக்கப்பட்ட மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்  நடத்தப்போவதாக அறிவித்து உள்ளனர்.

Tags : Kachirayapalayam , Chinnasalem: Due to the negligence of the highway authorities, the construction of the bridge at Kachirayapalayam is slow.
× RELATED கச்சிராயபாளையம் அருகே நள்ளிரவு கூரை...