×

காலமுறை ஊதியம் வழங்க கோரி ஊட்டியில் பூங்கா ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்-மலர் கண்காட்சி பராமரிப்பு பணிகள் பாதிக்க வாய்ப்பு

ஊட்டி : தோட்டக்கலைத்துறையில் பணியாற்றும் பூங்கா மற்றும் பண்ணை ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க கோரி ஊட்டி தாவரவியல் பூங்காவில் பண்ணை தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தோட்டக்கலைத்துறையில் பணியாற்றி வரும் பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்களின் சிறப்பு காலமுறை ஊதியத்தை காலமுறை ஊதியமாக மாற்றி வழங்க வேண்டும். பண்ணை பணியாளர்களுக்கு ஓய்வூதியம், தொகுப்பு நிதி, பணிக்கொடை வழங்க வேண்டும். தோட்டக்கலைத்துறையில் பணியாற்றும் பண்ணை பணியாளர்களுக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய சந்தா தொகை பிடித்தம் செய்திட வேண்டும்.

பணி மூப்பு அடிப்படையில் பத்தாண்டு பணிக்காலம் முடிந்தவர்களுக்கு ஒரு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்களுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் காலியாக உள்ள மஸ்தூர் மற்றும் அடிப்படை பணிகளுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். மருத்துவப்படி பிடித்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், பணியாளர்களுக்கு மருத்துவ விடுப்பு வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.

ேடன்ஹோடா பண்ணை பணியாளர்களை தமிழ் நாடு அரசு நிதித்துறை ஆணை எண் எம்.எஸ். எண் 287ன்படி பண்ணை பணியாளர்களாக அங்கீகரிக்க வேண்டும். தோட்டக்கலைத்துறையில் தினக்கூலியாக 5 ஆண்டுக்கு மேலாக பணியாற்றும் பூங்கா பண்ணை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தோட்டக்கலைத்துறையில் தினக்கூலி பணியாளர்களாக பணியாற்றும் பண்ணை மற்றும் பூங்கா பணியாளர்களுக்கு  கலெக்டர் வழங்கிய குறைந்தபட்ச கூலி வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி தாவரவியல் பூங்கா முன் பண்ணை பணியாளர்கள் கடந்த ஜனவரி மாதம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இவர்களது கோரிக்கைளை தோட்டக்கலைத்துறை மற்றும் தமிழக அரசு ஏற்காத நிலையில், நேற்று ஊட்டி தாவரவியல் பூங்காவில் மீண்டும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பூங்கா மற்றும் பண்ணை தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஏஐடியுசி., மாவட்ட செயலாளர் போஜராஜ்  தலைமை வகித்தார். ஏஐடியுசி., தொழிற்சங்கத்தை சேர்ந்த கருணைராஜ், மோகன்குமார், வாசு, ரமேஷ், பொருளாளர் உண்ணிகிருஷ்ணன், சிவக்குமார், ராஜா, சீனிவாசன், சிவசங்கர், ஆன்ந்தன் ஆகிேயார் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்எல்ஏ., மற்றும் ஏஐடியுசி., மாநில செயலாளர் ஆறுமுகம் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார்.

கோடை சீசன் நெருங்கிய நிலையில், அனைத்து பூங்காக்களிலும் மேம்பாட்டு பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது. ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சிக்கான பணிகள் நடந்து வரும் நிலையில், இது போன்று தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டால் மேம்பாட்டு பணிகள் பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே, தோட்டக்கலைத்துறை மற்றும் அரசு தொழிலாளர்களை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவது அவசியம்.

Tags : Park ,Ooty , Ooty : Demanding payment of periodical wages to park and farm workers working in horticulture at Ooty Botanical Gardens.
× RELATED தாவரவியல் பூங்காவில் நடவு...