எதிர்கட்சிகளின் முழக்கம் காரணமாக மக்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு..!

டெல்லி: எதிர்கட்சிகளின் முழக்கம் காரணமாக மக்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கியதில் இருந்தே உறுப்பினர்கள் அமளியை தொடர்ந்து அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டு வருகிறது. ராகுல் காந்தி பேச்சு, அதானி விவகாரம் ஆகிய பிரச்னைகளை எழுப்பி இரு தரப்பும் கடும் அமளியில் ஈடுபட்டு வருவதால், அவை தொடர்ந்து முடங்கி வருகிறது. இந்நிலையில், இன்றும் பாஜக, எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் 9ம் நாளாக முடங்கியது.

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கு பேச அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து ராகுல் காந்திக்கு பேச அனுமதி வழங்காததை கண்டித்து காங்கிரஸ், திமுக எம்பிக்கள் கோஷத்தோடு வலியுறுத்தினர். அதேபோல் பாஜகவினரும் எதிர்கோஷமிட்டனர். மேலும் அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை தேவை எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இருப்பினும் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பைனான்ஸ் திருத்த சட்ட மசோதா 2023யை தாக்கல் செய்தார்.

இதையடுத்து நாடாளுமன்றத்தின் மக்களவை நடவடிக்கைகள் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல மாநிலங்களவையிலும் காங்கிரஸ் இதே கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனால் மாநிலங்களவைவும் மதியம் 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: