×

கெங்கவல்லி அருகே வனப்பகுதியில் உடும்பு வேட்டையாடியவர் கைது-சிசிடிவி கேமரா மூலம் சிக்கினார்

கெங்கவல்லி :  கெங்கவல்லி அருகே உடும்பு வேட்டையாடியவர் கைது செய்யப்பட்டார். வனப்பகுதியில் கண்காணிப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மூலம் அவர் சிக்கினார்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாடுவதாக, கெங்கவல்லி வனச்சரக அலுவலர் சிவக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது தலைமையில், வனவர் செல்வன், வெங்கடேசன், வனக்காப்பாளர் பெரியசாமி, பச்சமுத்து, வனக்காவலர் விஜயகாந்த் மற்றும் குழுவினர் நேற்று முன்தினம், கெங்கவல்லி காப்புக்காடு இடையப்பட்டி வழித்தட சரகத்தில் எல்லை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், மலை சரிவில் மர்மநபர் ஒருவர், கையில் கத்தி வைத்துக்கொண்டு உடும்பு வேட்டையாடி அதனை எடுத்துச் செல்வது தெரியவந்தது.

அந்த காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தியதில், பச்சமலை ஊராட்சியைச் சேர்ந்த தர்மலிங்கம்(48) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் விசாரித்ததில், அவர் உடும்பு வேட்டையாடியது தெரியவந்தது. இதுதொடர்பாக அவர் மீது வழக்குப்பதிந்து, வாழப்பாடி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் சன்மதி(பொ) விசாரித்து, தர்மலிங்கத்தை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன் பேரில், அவர் ஆத்தூர் மாவட்ட கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.


Tags : Kengavalli , Kengavalli: Udumbu poacher arrested near Kengavalli. It was set up for surveillance in the forest
× RELATED ஏரியில் தீ விபத்து