கடலூர் : கடலூரில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக ஒருவருக்கு அபராதம் விதித்ததால் அவருடைய நண்பர் பிளேடால் உடலை கிழித்துக்கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கடலூர் மஞ்சக்குப்பம் அருகே உள்ள ஆல்பேட்டை சோதனை சாவடியில் வழக்கம் போல போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அவர்கள் குடிபோதையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மோட்டார் சைக்கிள்களை ஒட்டி வந்த மஞ்சக்குப்பத்தை சேர்ந்த நபருக்கு குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்து, அபராதம் விதித்துள்ளனர். பின்னர் இருவரும் அங்கிருந்து சென்று விட்டனர். சிறிது நேரம் கழித்து மோட்டார் சைக்கிள் பின்னால் உட்கார்ந்து இருந்த நபர், சோதனை சாவடி அருகே வந்து, நடுரோட்டில் நின்று கொண்டு தனது சட்டையை கழட்டி விட்டு, தான் கொண்டு வந்திருந்த பிளேடால் தன்னுடைய உடல் மற்றும் கைகளில் கிழித்துக்கொண்டார். இதனால் அவருடைய உடலில் இருந்து ரத்தம் அதிக அளவில் வெளியேறியது.
மேலும் அபராதம் விதித்தற்காக தற்கொலை செய்து கொள்வேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற சில வாகன ஓட்டிகள் மீதும் பிளேடால் கிழிக்க முயன்றுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்துவிட்டு அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதனால் கடலூரில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
