×

ராகுல்காந்திக்கு சிறை தண்டனை குடந்தையில் கே.எஸ்.அழகிரி ரயில் மறியல்: நாகையில் மோடி உருவபொம்மை எரிப்பு; தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்திய ஆயிரக்கணக்கான காங்கிரசார் கைது

கும்பகோணம்: ராகுல்காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து குடந்தையில் கே.எஸ்.அழகிரி ரயில் மறியல் போராட்டம் நடத்தினார். நாகையில் பிரதமர் மோடி உருவபொம்மை எரிக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்திய ஆயிரக்கணக்கான காங்கிரசார் கைது செய்யப்பட்டனர். பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை கண்டித்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் சாலை, ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.

தமிழ்நாட்டிலும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். கும்பகோணத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஏராளமான கட்சியினர் காங்கிரஸ் கொடியுடன் கும்பகோணம் ரயில் நிலையத்தில் நேற்று பிற்பகல் 12.05 மணிக்கு சென்னை செல்ல இருந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில்வே எஸ்.ஐ சிவராமன் தலைமையிலான போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து அதே ரயிலில் ஏறி கே.எஸ்.அழகிரி சென்னை புறப்பட்டு சென்றார்.

இதேபோல், கோவை ரயில் நிலையம், இரணியல் ரயில் நிலையம், குழித்துறை கிழக்கு ரயில் நிலையம், விருத்தாசலம் ரயில் நிலையம், ஓசூர் ரயில் நிலையம், திருவண்ணாமலை ரயில் நிலையம், தூத்துக்குடி ரயில் நிலையம் ஆகிய இடங்களிலும் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. நாகை மாவட்ட கட்சி அலுவலகம் முன்பு  பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பிரதமர் மோடியின் உருவபொம்மையை தீயிட்டு கொளுத்தினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உருவபொம்மை மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் பேருந்து நிலையம், வத்தலக்குண்டு, மதுரை கோரிப்பாளையம், தேனி நகர் பழைய பஸ் நிலையம், பெரியகுளம் பழைய பஸ் நிலைய நுழைவு வாயில், விருதுநகர் எம்ஜிஆர் சிலை, ராமநாதபுரம் அரண்மனை முன்பு, சிவகாசி, ஊட்டியில் உள்ள ஏடிசி பகுதி, திருப்பூர் குமரன் நினைவகம் முன்பு, ஈரோடு காங்கிரஸ் அலுவலகம் முன்பு, நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் சந்திப்பு, கடலூர் மஞ்சக்குப்பம் காமராஜர் சிலை அருகில், கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பு, சிதம்பரம் கஞ்சி தொட்டி அருகில், சேலம் பழைய பேருந்து நிலையம், ஓமலூர் காந்தி சிலை முன்பு, நாமக்கல் வெண்ணந்தூர் காமராஜ் சிலை முன்பு, தர்மபுரி 4 ரோடு ரவுண்டானா அருகே, கிருஷ்ணகிரி லண்டன் பேட்டை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு, வேலூர் அண்ணாசாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் அருகே, குடியாத்தம் புதிய பஸ் நிலையம் எதிரில், செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரே, திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் எதிரில், ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையம் அருகே, வாலாஜா பஸ்நிலையம், அரக்கோணம், நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு, நெல்லை சந்திப்பு - பாளை சாலை, ஆகிய இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு முமுவதும் நடந்த மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

* ஜனநாயகத்தின் இருண்ட நாள்
கும்பகோணத்தில் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது: ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் தண்டனை வழங்கியுள்ளது. இது ஜனநாயகத்தின் இருண்ட நாள் என்று சொல்லலாம். மாவட்ட நீதிமன்றங்கள் எவ்வாறு செயல்படுகின்றது என்பதை இந்த தீர்ப்பின் அடிப்படையில் புரிகிறது. இந்த தீர்ப்பு ஆராய்ந்து கொடுக்கப்பட்டதா? என தெரிய வில்லை. எது எப்படி இருந்தாலும் காங்கிரஸ் தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதும் சாலைகளில் திரண்டு தங்களது எதிர்ப்பை காட்டுவார்கள். மக்கள் மன உணர்வு எப்படி இருக்கிறது என்பதை மோடி அரசாங்கம் புரிந்து கொள்ளும். தமிழ்நாடு முழுவதும் எங்கள் தொண்டர்கள் இதற்காக தங்களை தியாகம் செய்ய கூட தயாராக உள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Rakulkandi ,S.S. ,Modi ,Nagi ,Tamil Nadu , Rahul Gandhi sentenced to jail KS Azhagiri train strike in Kudantai: Modi effigy burnt in Nagai; Thousands of Congressmen who protested across Tamil Nadu were arrested
× RELATED சொல்லிட்டாங்க…