ஆந்திராவிற்கு கடத்த வீட்டில் பதுக்கி வைத்த ரேஷன் அரிசி பறிமுதல்

தண்டையார்பேட்டை: தமிழக அரசு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை சார்பில், இலவசமாகவும், மானிய விலையிலும் அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த அரிசியை ஒரு கும்பல் குறைந்த விலைக்கு வாங்கி, அதை ஆந்திரா, கேரளா மாநிலத்திற்கு கடத்தி சென்று, அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறது. இதை தடுக்கும் விதமாக உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் மற்றும் உணவு பொருள் தடுப்பு போலீசார் கடத்தல் கும்பலை பிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், உணவு பொருள் வழங்கல் துறை உதவி ஆணையர் நெகமியா தலைமையில், அதிகாரிகள் நேற்று தண்டையார்பேட்டை, வஉசி நகர் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அதன்பேரில் போலீசார், அந்த வீட்டின் உரிமையாளர் மாலதியை பிடித்து நடத்திய விசாரணையில், அப்பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு அரிசியை வாங்கி, ஆந்திர மாநிலத்திற்கு கடத்தும் கும்பலிடம், அதிக விலைக்கு விற்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரது வீட்டில் இருந்து 1250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இதுகுறித்து உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, உணவு பொருள் பாதுகாப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: