திருவிழா அதிகம் நடப்பதால் கூடுதல் பட்டாசு தயாரிக்க அனுமதி இல்லாமல் அதிக வெடி பொருள் வைத்ததால் விபத்து: சட்டமன்றத்தில் அமைச்சர் தகவல்

சென்னை: தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அளித்த பதில்: பட்டாசு ஆலை 1991 முதல் இயங்கி வருகிறது. இங்கு ஒரு நேரத்தில் 15 கிலோ என்ற அளவில்தான் வெடி பொருள் வைத்து வேலை செய்ய வேண்டும். ஆனால், அந்த பகுதிகளில், அதிக திருவிழாக்கள் நடைபெற இருக்கின்ற காரணத்தினால், அதிகப்படியான பட்டாசுகள் தயாரிக்க வேண்டுமென்று சொல்லி, அந்த பட்டாசு ஆலையின் அதிபர் அதிக எண்ணிக்கையில் ஆட்களை அமர்த்தியுள்ளார். அதிகளவு பட்டாசுகளை, வெடி பொருட்களை வைத்து தயாரித்த காரணத்தினால்தான் இந்த வெடி விபத்தில் 10 பேர் இறந்திருக்கிறார்கள். விருதுநகர் மாவட்டத்தில் 1,076 பட்டாசு ஆலைகள் இருக்கின்றன.

அவர்கள் லாப நோக்கத்தை மட்டுமே கவனமாக வைத்து செயல்படுகிற காரணமாகத்தான் இந்த வெடி விபத்துகள் ஏற்படுகின்றன. இப்படிப்பட்ட விபத்துகள் ஏற்படுகின்ற நேரத்தில், அந்த பகுதிகளில் இருப்பவர்களுக்கு பயிற்சி குறைவாக இருக்கிறது. அதனால்தான் பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் ஏற்பட்டிருக்கின்றன. அதையும் மாவட்ட ஆட்சி தலைவர்களிடத்தில் எடுத்துச் சொல்லி, அவர்களுக்கும் உரிய பயிற்சி அளிக்க வேண்டுமென்று நாங்கள் வலியுறுத்திச் சொல்லியிருக்கிறோம். எனவே, காஞ்சிபுரம் ஆட்சி தலைவர் மட்டுமல்லாமல், அனைத்து ஆட்சி தலைவர்களுக்கும் இதுகுறித்து அறிவுறுத்தியிருக்கிறோம். தொடர்ந்து இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் இருக்க வேண்டிய நடவடிக்கைகளை நிச்சயமாக அரசாங்கம் எடுக்கும்.

Related Stories: