ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை ஆதரித்து பாஜ உள்ளிட்ட அனைத்து கட்சி எம்எல்ஏக்கள் பேச்சு: இனி ஒரு உயிர் போகக்கூடாது என்று வலியுறுத்தல்

சென்னை: ஓ.பன்னீர் செல்வம்(அதிமுக): முதல்வர் கொண்டுவந்த ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை அதிமுக சார்பில் முழுமையாக நான் வரவேற்கிறேன்.

தளவாய் சுந்தரம் (அதிமுக): அதிமுக ஆட்சி காலத்தில் இந்த தடை மசோதாவை இளைஞர்களின் நலன் கருதி அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார். ஆனால் உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இந்த சூழ்நிலையில் தற்போது மீண்டும் கொண்டு வந்துள்ள இந்த சட்ட மசோதாவை அதிமுக முழு மனதுடன் வரவேற்கிறது.

செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): பேரவையில் மீண்டும் ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடை சட்ட முன்வடிவை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது.

ஜி.கே.மணி (பாமக): ஒப்புதல் வழங்காமல் 131 நாட்கள் காலம் தாழ்த்தியது ஆளுநர் மனதில் உள்நோக்கம் இருக்கிறது என்பதை தெளிவாக்கிறது. ஆன்லைன் நேரடியாகவே கொலை செய்கிறது.

நயினார் நாகேந்திரன் (பாஜ): ஆளுநர் குறித்து தவறாக பேசக்கூடாது என பேரவைத் தலைவர் கூறினார். ஆனால் சிலர் ஆளுநரை விமர்சிக்கும் வகையில் பேசியுள்ளனர்.  

சபாநாயகர் அப்பாவு: விமர்சனம் செய்வதுபோல் வந்த சில வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்கி விட்டோம்.

அவை முன்னவர் துரைமுருகன்: ஆளுநர் செய்த தவறை சுட்டிக்காட்ட உறுப்பினர்களுக்கு உரிமை உண்டு.

நயினார் நாகேந்திரன் (பாஜ): ஆன்லைன் சூதாட்டத்தை ஒழித்தே தீர வேண்டும் என்பதில்  எந்த மாற்று கருத்தும் இல்லை. எல்லா சூதாட்டத்தையும் ஒழிக்க வேண்டும்.

ஆளூர் ஷாநவாஸ் (விசிக): ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை விசிக கட்சி வரவேற்கிறது.

நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): ஆன்லைன் நிறுவன நிர்வாகிகளை நேரில் சந்தித்த பிறகு, தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது சந்தேகத்தை எழுப்புகிறது.

வேல்முருகன் (தவாக): நூற்றுக்கணக்கான உயிர்கள் ஆன்லைன் ரம்மியால் பலியாகி உள்ளது. இனி இதுபோன்ற தவறுகள் நடைபெறக்கூடாது.

மேலும், பல்வேறு கட்சி தலைவர்களான மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட்),சதன் திருமலைக்குமார் (மதிமுக) ,ஜவாஹிருல்லா (மமக), ஈஸ்வரன் (கொமதேக)  ஆகியோர் பேசினர்.

Related Stories: