பாதுகாப்பான பொது இடம், போக்குவரத்து தொடர்பான பயிற்சி களப்பணியாற்றிய 22 பேருக்கு சான்றிதழ்: மேயர் பிரியா வழங்கினார்

சென்னை: குடிமக்களுக்கு பாதுகாப்பான பொது இடம், போக்குவரத்து தொடர்பான  பயிற்சியில் பங்கேற்று களப்பணியாற்றிய 22 பேருக்கு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:  சென்னை மாநகராட்சியின் பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகம் சார்பில் சேப்டிபின் மற்றும் பிரஜ்ன்யா என்னும் அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்ட குடிமக்களுக்கு பாதுகாப்பான பொது இடம் மற்றும் போக்குவரத்து தொடர்பான பயிற்சி கடந்த 9ம் தேதி முதல் நடத்தப்பட்டது. இந்த பயிற்சியில் 13 பெண்கள், 8 ஆண்கள் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 22 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்கள் சென்னை முழுவதும் உள்ள பேருந்து நிறுத்தங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட 46 போக்குவரத்து இடங்களில் நகர்ப்புற திட்டமிடலில் பாலினம் சார்ந்த பிரச்னைகள் குறித்தும், பொது போக்குவரத்து சேவைகள் மற்றும் அவற்றை சார்ந்துள்ள சாலைகள், கழிப்பறைகள், சுரங்கப்பாதை, நடைபாதை போன்ற இடங்கள் பெண்கள், திருநங்கைகள், மூத்த குடிமக்கள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட குழுக்களுக்கு பாதுகாப்பானதாக உள்ளதா என கள ஆய்வு செய்தனர். இந்த பயிற்சியில் பங்கேற்று, களப்பணியாற்றியவர்களை பாராட்டி மேயர் பிரியா சான்றிதழ் மற்றும் பதக்கங்களை நேற்று வழங்கினார்.

* சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் சென்னை பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 4,000 மாணவ, மாணவியருக்கு இந்தியன் அபாகஸ் நிறுவனத்தின் சார்பில் அபாகஸ் பயிற்சி வழங்கப்பட்டு கணிதம் மற்றும் திறன் மேம்பாட்டுப் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் கோப்பையை மேயர் பிரியா வழங்கினார். இந்த போட்டிகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்த அபாகஸ் ஆசிரியர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களை பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களையும் வழங்கினார்.

நிகழ்ச்சிகளில் துணை மேயர் மகேஷ்குமார்,  மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையர் (கல்வி) ஷரண்யா அறி, பாலின மற்றும் கொள்கை ஆய்வகத்தின் குழுத் தலைவர் மீரா சுந்தர்ராஜன், தமிழ்நாடு மாநில உருது அகாடமி துணைத் தலைவர் முகமது நயிமூர் ரஹ்மான், இந்தியன் அபாகஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் என்.பஷீர் அகமது, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.     

* குடிமக்களுக்கு பாதுகாப்பான பொது இடம் மற்றும் போக்குவரத்து தொடர்பான பயிற்சி கடந்த 9ம் தேதி முதல் நடத்தப்பட்டது. இதில் 13 பெண்கள், 8 ஆண்கள் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம்

22 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

Related Stories: