×

கடவுள் நம்பிக்கையுள்ள அரசியல் கட்சியினரை கோயில் அறங்காவலராக நியமிக்கலாம்: அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் அனுமதி

சென்னை: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.  அப்போது, அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருண் நடராஜன், மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 23 மாவட்டங்களில் உள்ள கோயில்களுக்கு அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான மாவட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு விட்டது. திருநெல்வேலி, நாமக்கல் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு மார்ச் 31ம் தேதிக்குள் மாவட்ட குழுக்கள் அமைக்கப்படும். மீதமுள்ள 11 மாவட்டங்களில் மே மாத இறுதிக்குள் மாவட்ட குழுக்கள் நியமிக்கப்படும் என்றார்.
இதை பதிவு செய்த நீதிபதிகள், மே மாதத்துக்குள் அனைத்து மாவட்டங்களுக்கும் மாவட்ட குழுக்கள் நியமிக்கப்படாவிட்டால் அறநிலையத்துறை செயலாளரும், ஆணையரும் ஆஜராக வேண்டி வரும்.

மாவட்ட குழுக்கள், எத்தனை நாட்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர் என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும். அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக எடுத்த நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். தவறினால், அறங்காவலர் நியமன பணிகளை கண்காணிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி நியமிக்கப்படுவார் என்று உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 5ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அப்போது, மாவட்ட குழுக்களில் அரசியல் கட்சியினர் நியமிக்கப்பட்டுள்ளனர். அரியலூர் மாவட்ட குழுவில் இந்து அல்லாத ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதிகள், அரசியல் கட்சியை சேர்ந்த கடவுள் பக்தி உள்ளவரை அறங்காவலராக நியமிக்கலாம். இந்து அல்லாதவர் நியமிக்கப்பட்டிருந்தால் அதை எதிர்த்து தனியாக தான் வழக்கு தொடர முடியும். இந்த வழக்கில் விசாரிக்க முடியாது என்று தெரிவித்தனர்.

Tags : God ,ICourt , God-believing politicians can be appointed as temple trustees: ICourt allows charity department
× RELATED தண்ணீர்… தண்ணீர்…