×

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் நிறைவேற்றம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அமித்ஷாவை சந்தித்தார்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில், ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் சட்ட மசோதா மீண்டும் நேற்று நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, நேற்று காலை சென்னையில் இருந்து ஆளுநர் ஆர்.என். ரவி அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார். பின்னர் அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டினால் ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனால் அவர்களின் குடும்பங்கள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து, தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தடை செய்யும் மசோதாவை, கடந்த சில மாதங்களுக்கு முன் சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது.

அந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல், பல்வேறு விளக்கங்களை கேட்டிருந்தார். அதற்கு தமிழ்நாடு அரசு உரிய விளக்கம் அளித்த பிறகும், கடந்த சில நாட்களுக்கு முன் மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். இதை தொடர்ந்து, ஆளுநர் திருப்பி அனுப்பிய ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை சட்ட மசோதாவை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி, அவற்றை ஆளுநருக்கு அனுப்பி வைக்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அந்த மசோதா மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டால், அந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தாக வேண்டும் என சட்ட விதி உள்ளது என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (23ம் தேதி) சூதாட்ட விளையாட்டு தடை சட்ட மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, சென்னை விமானெநிலையத்தில் இருந்து நேற்று காலை 10.05 மணியளவில் ஏர்இந்தியா பயணிகள் விமானத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி அவசரமாக டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். அவருடன் செயலாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் சென்றனர். தமிழ்நாடு ஆளுநரின் திடீர் டெல்லி பயணம், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு அவர் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.இந்த சந்திப்பு சில நிமிடங்கள் நீடித்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* பாஜ தலைவரின் அவசர விமான பயணம்
சென்னை விமான நிலையத்தில் இருந்து காலை 11.20 மணியளவில், விஸ்தாரா பயணிகள் விமானம் மூலமாக தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றார். ஒரே நாளில் அடுத்தடுத்து தமிழ்நாடு ஆளுநரும் தமிழக பாஜ தலைவரும் அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றிருப்பது தமிழக அரசியல் களத்தை சூடாக்கி உள்ளது.

Tags : Tamil Nadu ,Governor ,Ravi ,Amit Shah , Tamil Nadu Governor RN Ravi meets Amit Shah to re-pass Online Gambling Prohibition Bill
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்