கட்டாய திருமணம் செய்ய காதலியை காரில் கடத்திய அதிமுக பிரமுகர் கைது

திருவொற்றியூர்: திருவொற்றியூர் பாலகிருஷ்ணா நகரை சேர்ந்தவர் கோகுல கிருஷ்ணன் (28), அதிமுக மேற்கு பகுதி மாணவரணி செயலாளராகவும், ஐகோர்ட் வழக்கறிஞராகவும் இருந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் சவுமியா (24), பட்டதாரி பெண். இவர், ஓஎம்ஆர் சாலையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக சவுமியா, காதலன் கோகுலகிருஷ்ணனிடம் இருந்து விலகியதுடன் பேசுவதையும் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 21ம் தேதி காலை கடைக்கு சென்ற சவுமியா வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர், அக்கம்பக்கத்தில் விசாரித்த போது சவுமியாவை கோகுல கிருஷ்ணன் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி சென்றதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சவுமியாவின் பெற்றோர் சாத்தாங்காடு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து கோகுல கிருஷ்ணனையும் கடத்தப்பட்ட சவுமியாவையும் தேடி வந்தனர். இந்நிலையில் கோகுலகிருஷ்ணன் புதுச்சேரியில் இருப்பதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் இருவரையும் மீட்டனர். அப்போது தனக்கு

விருப்பமில்லாமல் கட்டாயப்படுத்தி திருமணம் செய்வதற்காக புதுச்சேரிக்கு கோகுல கிருஷ்ணன் கடத்தி வந்ததாக போலீசாரிடம் சவுமியா கூறியுள்ளார். இதன் அடிப்படையில் கோகுலகிருஷ்ணன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: