ஊத்துக்கோட்டை: நந்திமங்கலம் கிராமத்தில் தினகரன் செய்தி எதிரொளியால் எம்எல்ஏ நிதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் பணிகள் 90 சதவீதம் முடிந்தது. ஊத்துக்கோட்டை அருகே பூண்டி ஒன்றியம் நந்திமங்கலம் ஊராட்சியில் அங்கன்வாடி மையம் உள்ளது இந்த அங்கன்வாடி மையம் 1980 ஆம் ஆண்டு , 43 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. இதில் அதே பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்தனர் . இவர்கள் படித்து வரும் அங்கன்வாடி மைய கட்டிடம் மிகவும் பழுதடைந்தும் மேல்தளம் சேதமடைந்தும், கட்டிடம் விரிசல் ஏற்பட்டு அதில் செடிகொடிகள் படர்ந்தும் இதை சுற்றியும் புதர்கள் மண்டிக்கிடக்கிறது இதில் விஷப்பூச்சிகள் மையத்தின் உள்ளே வருகிறது.
இந்த விஷப்பூச்சிகள் தீண்டி விடுமோ என பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்புவதற்கு அச்சப்பட்டனர். இந்நிலையில் கடந்த 2012 - 2013ம் ஆண்டு ரூ. 90 ஆயிரம் மதிப்பில் பழுதடைந்த கட்டிடம் சீரமைக்கப்பட்டது. அதன் பிறகு மீண்டும் அங்கன்வாடி மையம் சேதம் ஏற்பட்டது. இது குறித்து அப்பகுதி மக்கள் பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர் , மேலும் அங்கன்வாடி மையம் கட்ட வேண்டும் என வலியுறுத்தி கிராம சபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. இது குறித்து எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை.
இதனால் அருகில் உள்ள நூலக கட்டிடத்தில் கடந்த 3 வருடமாக மாணவர்கள் படித்து வருகிறார்கள். இது சம்பந்தமாக தற்போதைய கும்மிடிபூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10.90 லட்சம் நிதி ஒதுக்கினார். ஆனால் பணிகள் தொடங்காமல் இருந்தது. எனவே பழுடைந்து கிடக்கும் அங்கன்வாடி மையத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டவேண்டும் என தினகரன்நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது, இந்நிலையில் தினகரன் செய்தி எதிரொளியால் எம்எல்ஏ ஒதுக்கிய நிதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுமான பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.