×

வரி ஏய்ப்பு புகார் பாஜ நிர்வாகி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் சிவந்தி நாராயணன். இவர், பாஜ மாநில பட்டியல் அணி பொதுச்செயலாளராக உள்ளார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதோடு புதிய வீடுகள் கட்டி விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை ராஜீவ்நகரில் உள்ள இவரது வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சிவந்தி நாராயணன் வீட்டில் இல்லை. அவரது மனைவி மட்டும் இருந்தார். இதனால்,  சிவந்தி நாராயணனை போனில் தொடர்பு கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வரவழைத்தனர். மதியம் 12 மணியளவில் சிவந்தி நாராயணன் அவரது வீட்டிற்கு வந்தார். இதைத்தொடர்ந்து கோவில்பட்டி ஏகேஎஸ் ரோட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதேநேரத்தில் அவரது வீட்டிலும் சோதனை நடந்தது. இந்த சோதனை இரவு வரை நீடித்தது. சிவந்தி நாராரயணன் ஒன்றிய அரசின் ஒப்பந்ததாரராக உள்ளார். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ஏராளமான வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளார். மேலும் ரியல் எஸ்டேட் துறையிலும் அதிகளவில் முதலீடு செய்துள்ளதாக தெரிகிறது. இதில் ஏதேனும் வரி ஏய்ப்பு நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிவந்தி நாராயணன் கூறுகையில், நான் திருப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்துடன் சேர்ந்து வீடுகள் கட்டிக் கொடுத்து வருகிறேன். அவர்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தெரிகிறது. அந்த நிறுவனத்தில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்திய போது, நான் அவர்களுடன் இணைந்து வீடுகள் கட்டிக் கொடுப்பதாக தெரிவித்துள்ளார்கள். இதனால் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் என்னுடைய வீட்டில் சோதனை நடத்தினர். நான் எந்தத் தவறும் செய்யவில்லை. நாகர்கோவிலில் இருந்த நான், ரெய்டு தகவல் கிடைத்ததும், கோவில்பட்டிக்கு வந்தேன் என்றார்.



Tags : Baja , Enforcement Directorate raids house of BJP executive on tax evasion complaint
× RELATED உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பறிமுதல்...