கத்தியுடன் வாலிபர் நுழைந்த சம்பவம் எதிரொலி திருவண்ணாமலை கோயிலுக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு: 3 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் திருமஞ்சன கோபுரம் வழியாக நேற்று முன்தினம் கோயிலுக்குள் தனது காதலியுடன் வந்த பெங்களூரு வாலிபர், கத்தியை காட்டி மிரட்டி போதையில் ரகளையில் ஈடுபட்டு, இணை ஆணையர் அலுவலகத்துக்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினார். விசாரணையில் அவர், பெங்களூரு காவல்பை சந்திரா ஆர்டி நகர் பகுதியைச் சேர்ந்த அப்பு என்கிற பிரத்தம் (23) என்பதும், அவருடன் வந்த காதலி பெங்களூரு தேவிரோடு ரிச்சல்பார்க் பகுதியைச் சேர்ந்த ஜெனிபர் (21) என்பதும் தெரியவந்தது. போதை வாலிபர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

காதலி காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில், போலீஸ் பாதுகாப்பையும், மெட்டல் டிடெக்டர் சோதனையையும் மீறி, திருமஞ்சன கோபுரம் வழியாக போதை வாலிபர் கோயிலுக்குள் கத்தியுடன் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், கோயில் பாதுகாப்பை அதிகரிக்க எஸ்பி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அண்ணாமலையார் கோயிலின் பிரதான நுழைவு வாயிலான ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம் மற்றும் பே கோபுரம் ஆகிய நான்கு நுழைவு வாயில்களிலும் நேற்று முதல் இயந்திர துப்பாக்கி (ஏகே 47) ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் 24 மணி நேரமும் இங்கு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கோயிலுக்குள் நுழையும் பக்தர்கள் அனைவரும் மெட்டல் டிடெக்டர் கருவி சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், பக்தர்கள் கொண்டுசெல்லும் பை மற்றும் பொருட்களும் சோதனை செய்யப்படுகிறது. டிராவல்ஸ் பேக், லக்கேஜ் பேக், சூட்கேஸ் உள்ளிட்டவைகள் கோயிலுக்குள் கொண்டுசெல்ல அனுமதிக்கப்படவில்லை. இதற்கிடையே, போதை வாலிபர் சென்ற திருமஞ்சன கோபுரம் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு சிறப்பு எஸ்ஐ மற்றும் இரண்டு ஏட்டுகளை  ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்பி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: