திருப்போரூர்: விஐடி சென்னை பல்கலையில் 2 நாள் சர்வதேச கருத்தரங்கம் நடந்து வருகிறது. விஐடி பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் வேந்தருமான முனைவர் கோ.விசுவநாதன், விஐடியின் துணை தலைவர்கள் சங்கர் விசுவநாதன், முனைவர் சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம் ஆகியோரின் வழிகாட்டுதலின்பேரில் விஐடி சென்னையில் 23.3.2023 மற்றும் 24.3.2023 ஆகிய தேதிகளில் Advanced Materials, Manufacturing and Industrial Engineering (AMMIE 2023) என்ற தலைப்பில் 2 நாள் சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.
ஸ்கூல் ஆப் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (விஐடி, சென்னை), ASM இன்டர்நேஷனல் கவுன்சில் (இந்தியா நேஷனல் கவுன்சில்), தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றம் (NDRF), AMFA குழு, பெங்களூர் மற்றும் Hexagon நிறுவனம், பெங்களூர் ஆகியவை இணைந்து இந்த கருத்தரங்கினை ஏற்பாடு செய்தன.
23.3.2023 அன்று நடைபெற்ற கருத்தரங்கின் தொடக்க விழாவில், விஐடி சென்னை, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையின் டீன் முனைவர் கே.அண்ணாமலை வரவேற்புரை நிகழ்த்தினார். பேராசிரியர் முனைவர் ஆர்.மோகன், கருத்தரங்கின் மையக்கருத்தை விளக்கி பேசினார். சென்னை விஐடியின் இணை துணைவேந்தர் முனைவர் காஞ்சனா பாஸ்கரன் வாழ்த்துரையில், விஐடியின் செயல்பாடுகளை எடுத்துரைத்து கருத்தரங்கின் முக்கியத்துவத்தையும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
கௌரவ விருந்தினர் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பை சேர்ந்த இணை இயக்குநர் முனைவர் ஆர்.பாஸ்கரன், உற்பத்தி துறையின் வளர்ச்சிக்கு நவீன கருவிகள், தொழில்நுட்பங்கள் ஆற்றும் பங்களிப்பு குறித்து விளக்கி பேசினார்.
லெனாக்ஸ் இந்தியா தொழில்நுட்ப மையம். பிரைவேட் லிமிடெட் இயக்குநர் ஹனுமகுமார் ஓலேட்டி, பேசுகையில், நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படும் நவீன உற்பத்தி துறை தொழில்நுட்பங்கள் குறித்து பேசினார். பேராசிரியர் முனைவர் கிரிதரன் நன்றி உரை நிகழ்த்தினார். கருத்தரங்கில் பங்கேற்பாளர்கள் ஆன்லைனிலும் கலந்து கொள்ளும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கருத்தரங்கில் ஸ்வீடன், ட்ரோல்ஹாட்டன் மேற்கு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் ஜோயல் ஆண்டர்சன் மற்றும் முனைவர் ஸ்ரீகாந்த் ஜோஷி ஆகியோர் மூலப்பொருள்கள் என்ற கருப்பொருளில் சொற்பொழிவுகளை நிகழ்த்தினர்.
கனடா நாட்டை சேர்ந்த பேராசிரியர் முனைவர் லூகாஸ் ஹோப் மற்றும் சென்னை எல்எஸ்ஐ- மெக் இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் உமா மகேஷ் கணேஷ் ஆகியோர் உற்பத்தி அம்சங்கள் குறித்து விரிவுரைகள் வழங்கினர். இந்த 2 நாள் கருத்தரங்கில், புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் முறைகள், மைக்ரோ மற்றும் நானோ பேப்ரிகேஷன், ரோபாட்டிக்ஸ் உள்ளிட்டவை குறித்து, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 220 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
