×

சித்தாமூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்: சுந்தர் எம்எல்ஏ வழங்கினார்

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மேட்டு கொளத்தூர் கிராமத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சித்தாமூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வி.ஏழுமலை தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் வேங்கடகிருஷ்ணன், பாஸ்கர், நாகப்பன், குமுதா மதுரை, செல்வம், ஒன்றிய குழு உறுப்பினர் குப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இளைஞரணி செயலாளர் குமார் அனைவரையும் வரவேற்றார்.

இதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு சைக்கிள், இஸ்திரி பெட்டி, புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை  500 பேருக்கு வழங்கினார். பின்னர், அவர் பேசுகையில், ‘‘தமிழ்நாடு  சட்டமன்ற பட்ஜெட்டில் அறிவித்தபடி செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று மகளிர் உரிமை தொகை வழங்குவதை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். செய்யூர் தொகுதி முழுவதும் விவசாய பகுதி. இங்கு விவசாயம் நெல்லினை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனியார் வியாபாரிகள் மட்டுமே   கொள்முதல் செய்வார்கள். ஆனால், தற்பொழுது சித்தாமூர் ஒன்றியத்தில் 11 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை அரசு அமைத்துள்ளது சன்னரக நெல் 80 கிலோ மூட்டைக்கு ரூ.1750 விலை கொடுத்து கொள்முதல் செய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் போட்டு இயற்கை விவசாயம், பாரம்பரிய  நெல் பாதுகாப்பு இப்படி பல விதமான அறிவிப்புகளை வேளாண்மை துறை அமைச்சர் அறிவித்திருக்கிறார். இந்த அரசு பதவி ஏற்ற இரண்டு ஆண்டு காலத்தில் பெண்களுக்கு நகை கடன் தள்ளுபடி, சுய உதவி குழு கடன் தள்ளுபடி, பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவசம், கல்லூரியில் சேர்ந்தால் மாதம்தோறும் ஆயிரம் வழங்கி பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது திமுக அரசு மட்டும் தான்.

தமிழ்நாடு பொதுமக்கள்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் பரிசு கொடுக்க வேண்டுமென்றால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இதுவே அவருக்கு நாம் தரும் பிறந்தநாள் பரிசு.’’ என்றார். சித்தாமூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிற்றரசு, அவை தலைவர் இனியரசு, மாவட்ட கவுன்சிலர் குணா, ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் பிரேமா சங்கர் உள்ளிட்ட  பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில், கிளை பிரதிநிதி சண்முகம் நன்றி கூறினார்.

Tags : Chittamur West Union DMK ,Sundar , Welfare assistance to the poor on behalf of Chittamur West Union DMK: Sundar MLA provided
× RELATED ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50...