×

வளி மண்டல காற்று சுழற்சி நீடிப்பு 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: வளிமண்டல காற்று சுழற்சி நீடிப்பின் காரணமாக, தமிழ்நாட்டில் 23 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசைக் காற்றும் இணைவதால், தமிழ்நாடு, புதுச்சேரியில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி, நேற்று தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னல், சூறைக்காற்று, ஆலங்கட்டி மழையுடன் மழை பெய்தது.

வந்தவாசியில் நேற்று மதியம் ஒரு மணி நேரம் ஆலங்கட்டி மழை பெய்தது. கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது. திருவள்ளூர் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் பலத்த மழை பெய்தது. சென்னை, புறநகர் பகுதிகளிலும் நேற்று மதியத்துக்கு பிறகு மழை பெய்தது. தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் நேற்று இயல்புக்கு மாறாக 2.1 முதல் 4.0 செல்சியஸ்வரையில் வெப்பம் அதிகரித்தது. திருப்பத்தூர், திருவள்ளூர், ராமநாதபுரம், வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3.1 செல்சியஸ் முதல் 5.0 செல்சியஸ் வரையிலும், தஞ்சாவூர்,சென்னை, கடலூர், தர்மபுரி, நாகப்பட்டினம், திருச்சி மாவட்டங்களில் இயல்பைவிட 1.6 டிகிரி செல்சியஸ் முதல் 3.0 டிகிரி செல்சியஸ் வரையில் ெ வப்பம் அதிகரித்து காணப்பட்டது.

அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பம் நேற்று பதிவாகியிருந்தது. குறைந்தபட்சமாக ஈரோட்டில் 21.1 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது. இந்நிலையில், வளி மண்டலத்தில் மேல் நிலவும் காற்றுசுழற்சி, விசாகப்பட்டினம், காக்கிநாடா, விஜயவாடா, நெல்லூர், திருப்பதி, சென்னை, வேலூர், புதுச்சேரி, நாகப்பட்டினம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி பகுதிகள் வரை நீண்டு பரவியிருப்பதால் இந்த பகுதிகளில் மற்றும் நெல்லை - நாமக்கல், போடி நாயக்கனூர்- காரைக்குடி, தஞ்சாவூர்- திருத்தணி வரையும், ஆம்பூர்-புதுச்சேரி ஆகியவற்றில் இடைப்பட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்யும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் இடியுடன் மழை பெய்யும்.

Tags : Meteorological Department , Monsoon wind circulation likely to rain in 23 districts: Meteorological Department announcement
× RELATED 19ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்