×

பித்தப்பை கற்கள்… அலட்சியம் வேண்டாம்!

நன்றி குங்குமம் டாக்டர்

இதயம், கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல் போன்ற உறுப்புகளைப் பற்றி தெரிந்துவைத்திருக்கும் அளவுக்கு நமக்கு பிற உள்ளுறுப்புகள் பற்றி அதிகமாகத் தெரியவில்லை. ஆனால், நமக்குப் பெயர் தெரியாவிட்டால் என்ன அந்த உறுப்புகள் தங்கள் கடமையை செவ்வனே செய்துகொண்டுதான் இருக்கின்றன. அப்படியான உறுப்புகளில் ஒன்று பித்தப்பை.

நாம் உட்கொள்ளும் உணவு எப்படி சிதைகிறது அல்லது உடலுக்குள் செரிக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டால் பித்தப்பை எத்தனை முக்கியமான உறுப்பு என்பதைப் புரிந்துகொள்ளலாம். ஆனால் பெரும்பாலோருக்கு செரிமானத்தின் பின்னணியில் உள்ள செயல்முறை பற்றித் தெரிவதில்லை. ஒருவர் அதிகமான உணவை உட்கொண்டு, வயிற்றுப் பிரச்சனைக்கு உள்ளாகிவிட்டால், உண்மை என்னவென்று தெரிந்துகொள்ளாமல், அஜீரணமாகி விட்டது என்று கூறுகிறார்கள். மனித உடலில் கல்லீரலுக்குக் கீழே ஒரு சிறிய பை உள்ளது, இது பித்தப்பை. இது செரிமான திரவமான பித்தநீரை சேமித்து வைத்திருக்கிறது. பித்தப்பையில் சேரும் திடப்படுத்தப்பட்ட கழிவுப் பொருட்களே பித்தப்பைக் கற்கள்.

வழுவழுப்பான கொலஸ்ட்ரால் அல்லது பிலிரூபினால் ஆனவை பித்தப்பைக் கற்கள். இது ஒரு பெரிய கல்லாக இருக்கலாம் அல்லது பல சிறிய கற்களாக இருக்கலாம். கற்கள் சில நேரங்களில் கடுமையான வயிற்று வலியை ஏற்படுத்தும். அதே நேரம் அறிகுறி யற்றதாகவும்  இருக்கலாம். வயிற்று வலியைப் பெரும்பாலோர் ஒன்றுமில்லை எனப் புறக்கணித்து விடுகிறார்கள். ஆனால், அஜீரணக்கோளாறு, வாயுப்பிடிப்பு என தாங்களாகவே சுயவைத்தியம் செய்யாமல், வயிற்று வலி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம்.

அறிகுறிகளைப் புறக்கணிக்கக் கூடாது

ஒரு வெளிப்பொருள் அல்லது உடலுக்குள் ஒரு பிரச்சனை இருக்கும்போது மனித உடல் எப்போதுமே சில அறிகுறிகளை வெளிப்படுத்த முயற்சிக்கும். பித்தப்பைக் கற்கள், அடிவயிற்று வலி அல்லது வயிற்று வலி போன்றவற்றின்போதும் இது பல மணிநேரம் நீடிக்கும். இது கடுமையானதாக இருக்கும். காய்ச்சல் ஏற்படுவது உடலில் இருந்து வெளிப்பொருட்களை அகற்றுவதற்கான ஒரு வழி. பசியின்மை, வயிற்றுப் போக்கு அல்லது விரைவான இதயத் துடிப்புகூட ஒரு பிரச்சனையை உடல் வெளிப்படுத்தும் வழிமுறையாக இருக்கலாம்.

‘அமைதியான பித்தப்பை கற்கள்’ என்றுஅழைக்கப்படும் அறிகுறியற்ற பித்தப்பைக் கற்களை 70% பேர் கொண்டிருப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இங்கு உடல் எந்தவித அறிகுறியையும் காட்டாது. அதே நேரம் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் அல்லது வழக்கமான உடல்நலப் பரிசோதனையின் உதவியுடன் மருத்துவர்கள் இதைக் கண்டறிகின்றனர்.

காரணம் என்ன?

பித்தப்பையில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பு, காலப்போக்கில் திடமாகத் தொடங்குகிறது, இது பித்தப்பைக் கற்களாக மாறுகிறது. ஒரு நபர் அதிகப்படியான கொலஸ்ட்ரால் கொண்ட உணவை உட்கொள்ளும்போது பித்தப்பையில் உள்ள அதிகப்படி கொலஸ்ட்ரால் இரட்டிப்பாகும். இது பித்தப்பையில் இருக்கும் கொழுப்பை படிகமாக்கலுக்கு வழிவகுக்கிறது. மேலும் பிலிரூபின் (ஹீமோகுளோபின் முறிவினால் கல்லீரலில் உருவாகும் நிறமி) கூட பித்தத்தில் படிகமாகி, பித்தப்பையில் கற்கள் உருவாவதற்கு வழிவகுக்கிறது.

தடுப்பது எப்படி?

பித்தப்பைக் கற்கள் உருவாவதை முற்றிலும் தடுக்க எந்த வழியும் இல்லை. இருப்பினும், பித்தப்பை கற்கள் உருவாவதில் கொலஸ்ட்ரால் முக்கிய பங்கு வகிக்கிறது, இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். உடலில் இது சார்ந்து ஏதேனும் அறிகுறி தென்பட்டால் கேக், குக்கீ, சீஸ், கொழுப்பு நிறைந்த இறைச்சி, அதிகப்படி கிரீம் போன்ற உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. உடல் பருமன், உடலில் அதிக அளவு கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு பித்தப்பையில் கற்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். அதிக எண்ணெய் அல்லது சர்க்கரை கொண்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

நோயின் தீவிரம் ஆரம்பத்திலேயே அதிகமாக இருந்தாலும், அது பொதுவாக பெரிய அறிகுறிகளைக் காட்டாது. அந்த சூழ்நிலையில் இது தொடர்பான ஆபத்து காரணிகள் அதிகரித்துக்கொண்டிருக்கும். எனவே, ஒருவர் ஆறு  மாதங்களுக்கு ஒரு முறையாவது முழுமையான உடல்நலப் பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும். மேலும் அந்த நபருக்கு அடிக்கடி செரிமான பிரச்சனைகள் இருந்தால், தவறாமல் மருத்துவரை அணுகுவது நல்லது.

சிகிச்சைகள்

பித்தப்பை கற்கள் கொண்ட நோயாளியின் உடல் நிலை, நோயின் தீவிரத்துக்கு தகுந்தாற்போல் சிகிச்சைகள் மாறுபடும். வாய் வழி பித்த மாத்திரைகள் தருவது, பித்தப்பை கல்லை கரைப்பதற்கான சிகிச்சைகள், பெர்குடேனியஸ் கோலிசிஸ்டெக்டோமி போன்ற அறுவைசிகிச்சை இல்லாத சிகிச்சை முறைகள் உள்ளன. பித்தப்பைக் கற்கள் அதிகமாக இருந்தாலோ தொடர்ந்து உருவாகிக்கொண்டே இருந்தாலோ மருத்துவர் அறுவைசிகிச்சையைப் பரிந்துரைப்பார்.

தொகுப்பு : ஜாய் சங்கீதா

Tags : Gallstones…do ,
× RELATED கவுன்சலிங் ரூம்