சென்னை மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள வாகனநிறுத்தம் தற்காலிகமாக மூடல்

சென்னை: சென்னை மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் தற்போது வாகனங்கள் நிறுத்த கூடிய இடத்திற்கு அருகாமையில் கூடுதலாக வாகனங்கள் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில் நிலையத்தின் அருகே இடம் குத்தகைக்கு எடுக்கப்பட்டு வாகன நிறுத்தும் இடம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில் நிலையத்தில் கூடுதலாக விரிவுபடுத்தப்பட்டுள்ள இருசக்கரம் மற்றும் நான்கு சக்கரம் வாகன நிறுத்தும் வசதி கடந்த 19ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வந்தது. இந்த வாகன நிறுத்தும் இடத்தில் 1000 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 60 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த முடியும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே மெட்ரோ ரயில் பயணிகள் இந்த வாகன நிறுத்துமிடத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

இந்த நிலையில், மீனம்பாக்கம் மெட்ரோ இரயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்தும் பகுதி, பயணிகளின் வசதி மற்றும் பார்க்கிங் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் புதுப்பிக்கப்படவுள்ளது. இதனால், மீனம்பாக்கம் மெட்ரோ இரயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்தும் பகுதி சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்பட்டது. மீனம்பாக்கத்துக்கு மாற்றாக பரங்கிமலை, நங்கநல்லூர் மெட்ரோ வாகன நிறுத்துமிடங்களை பயன்படுத்தி கொள்ளலாம் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: