×

பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் தூய்மை பணி தொடர ஏற்பாடு: கலெக்டர் கார்த்திகேயன் தகவல்

விகேபுரம்: உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தன்னார்வலர்கள்- நகராட்சி பணியாளர்கள் இணைந்து பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் தூய்மை பணியை தொடர்ந்து மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என்று கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்தார். ‘நீரின்றி அமையாது உலகெனின் யார் யாருக்கும் வானின்று அமையாது ஒழுக்கு’ என்று நீரின் முக்கியத்துவம் மற்றும் பெருமை திருக்குறளில் கூறப்பட்டுள்ளது. அதாவது நீரின்றி இந்த உலகில் எந்த உயிரும் வாழ முடியாது. அந்த நீரை உலகத்திற்கு வழங்கும் மழை இல்லையென்றால் இவ்வுலகில் எந்த உயிரினங்களும் வாழ முடியாது என்று திருவள்ளுவர் விளக்கியுள்ளார்.

அவ்வளவு சிறப்பு வாய்ந்த நீரின் முக்கியத்துவத்தை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் உலக நீர் தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்தாண்டு உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நேற்று நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தும் பணி நடந்தது. பாபநாசத்தில் திருச்சி சாமி மடம் அருகில், அய்யனார் கோயில் முன்பு, தலையணை செல்லும் அருகில், ஆனந்த விலாஸ் மண்டபம் மற்றும் பாபநாசம் படித்துறை உள்ளிட்ட பகுதிகளில் மணிமுத்தாறு பயிற்சி நிலையம் காவலர்கள் மற்றும் விகேபுரம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வீர புத்திரன், கூடலரசன், ஜெயராம், கிரிக்கெட் மூர்த்தி உள்ளிட்டவர்கள்  தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

மணிமுத்தாறு பட்டாலியன் கமாண்டர் கார்த்திகேயன் தலைமையில் உதவி கமாண்டர் மனோகரன் இன்ஸ்பெக்டர்கள் சிவசங்கரன், சந்திரசேகர், பவுன்ராஜ், லாரன்ஸ் ஆகியோர் தூய்மைப் பணியின் பொறுப்பாளர்களாக செயல்பட்டனர். இந்த தூய்மை பணியை நெல்லை கலெக்டர் டாக்டர் கார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட பணியாளர்களை பாராட்டினார். தொடர்ந்து உலக தண்ணீர் தினம் உறுதிமொழி கலெக்டர் தலைமையில் எடுக்கப்பட்டது. தூய்மை பணியை சிறப்பாக செய்து வரும் சமூக ஆர்வலர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

இது குறித்து கலெக்டர் கார்த்திகேயன் கூறுகையில், தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி தாமிரபரணி ஆற்றில் தூய்மை பணி தொடர்ந்து செய்யப்படும். பரிகாரங்கள் செய்பவர்களின் நம்பிக்கைக்கு பாதகம் வராமல் தூய்மை பணி நடக்கும். காவல்துறை, தன்னார்வலர்கள் மற்றும் அனைத்து துறைகளைச் சார்ந்தவர்களையும் ஊக்கப்படுத்தப்பட்டு தூய்மைப்பணி தொடர்ந்து நடக்க ஏற்பாடு செய்யப்படும். இது சம்பந்தமாக நெல்லையில் வரும் 27ம்தேதி கூட்டம் நடத்தப்படும். தொடர்ந்து 29ம் தேதியும் கிரீன் மீட்டிங் நடத்தப்பட்டு தூய்மைப் பணி வேகப்படுத்தப்படும். பாபநாசம் கோவிலில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.

நகராட்சி நிர்வாகமும் கோவில் நிர்வாகமும் தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்துவதில் ஒருங்கிணைந்து செயல்படும்’ என்றார்.
ஆய்வின் போது, விகேபுரம் நகராட்சி தலைவர் செல்வ சுரேஷ் பெருமாள், ஆணையாளர் கண்மணி, சுகாதார ஆய்வாளர் பொன் வேல்ராஜ், அம்பை தாசில்தார் விஜயா, பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வம், ஆர்ஐ இசக்கி, கோவில் நிர்வாக அதிகாரி போத்திச்செல்வி, கோவில் மணியம் செந்தில் கிருஷ்ணன், முன்னாள் நகராட்சி தலைவர் மாரியப்பன், கவுன்சிலர்கள் ராமலட்சுமி, கவுகர் கான், முத்துராமலிங்கம், தளவாய், மகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தடையை மீறி குளித்தவர்களை எச்சரித்த கலெக்டர்
 பாபநாசத்தில் தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தும் பணியை கலெக்டர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார். அப்போது, சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை செய்யப்பட்ட பாபநாசம் தலையணையை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அங்கு தடையை மீறி சிலர் குளித்து கொண்டிருந்தனர். அவர்களிடம் கலெக்டர், உயிர்பலி ஏற்படுவதால் இங்கு குளிக்க தடை உள்ளது. இனி வருங்காலங்களில் தடையை மீறி குளித்தால் உங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தடையை மீறி குளித்தவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி
வைத்தார்.

ஆற்றில் இருந்து கழிவு துணிகள் அகற்றம்
பாபநாசத்தில் பரிகாரம் செய்ய வருவோர் தாமிரபரணி ஆற்றில் குளித்து விட்டு ஆடைகளை போடுவதற்காக ஆற்றின் ஓரத்தில் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், பக்தர்கள் சிலர் தொடர்ந்து பரிகாரம் செய்த பிறகு ஆற்றிலேயே துணிகளை போட்டு விடுகின்றனர். இதனால், துணி கழிவுகள் சேர்ந்து ஆற்று நீரின் வேகத்தை தடை ஏற்படுத்துகிறது. மேலும் இது போன்ற கழிவு துணிகளால் ஆறு மாசு ஏற்படுகிறது. இந்நிலையில் நேற்று சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளும் போது ஆற்றின் கழிவு துணிகள் முழுவதும் அகற்றப்பட்டது. அப்போது ஆய்வு மேற்ெகாண்ட கலெக்டர் கார்த்திகேயன், பரிகாரம் செய்ய வந்த பக்தர்களிடம் ஆற்றில் துணிகளை போடக்கூடாது என்று அறிவுரை வழங்கினார்.


Tags : Thamirapharani River ,Papanasam ,Karthikeyan , Arrangements to continue cleanliness work in Thamirapharani River, Papanasam: Information from Collector Karthikeyan
× RELATED பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் பக்தர்கள்...