மானாமதுரை அருகே அரிமண்டபம் கண்மாயில் மீன்பிடித் திருவிழா: வாளிகளில் அள்ளிய கிராம மக்கள்

மானாமதுரை: மானாமதுரை அருகே அரிமண்டபம் கிராம கண்மாயில் நடந்த மீன்பிடித் திருவிழாவில் கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, போட்டி போடடு கூடை, வாளிகளில் மீன்களை அள்ளிச் சென்றனர். மானாமதுரை அருகே அரிமண்டபம் கிராமத்தில் உள்ள கண்மாய் 100 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த கண்மாயில் இருந்து 250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த 5 ஆண்டுகளாக மழை போதிய அளவு பெய்யாததால் கண்மாய் நிரம்பவில்லை. இந்தாண்டு பருவமழை கை கொடுத்ததால் கண்மாய் நிறைந்தது. கண்மாயில் கெண்டை, ஜிலேபி, கட்லா, ரோகு, கெழுத்தி, அயிரை என மீன்களும் பெருகின.

விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டதால் கண்மாயில் நீர் வற்றியது. இதையடுத்து ஊர் கூட்டம் நடத்தப்பட்டு கண்மாயில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் காலை கிராமத் தெய்வங்களுக்கு பூஜை நடந்தது. அதன் பின்னர், கிராம மக்கள் கண்மாயில் இறங்கி கச்சா வலை, சேலை, கண்ணுபொடி வலை போன்ற உபகரணங்களுடன், போட்டி போட்டு மீன்களை பிடிக்க துவங்கினர். ஒவ்வொருக்கும் ஐந்து முதல் பத்து கிலோவிற்கு மேல் மீன்கள் கிடைத்ததால், மகிழ்ச்சியுடன் வாளிகளில் அள்ளிச் சென்றனர்.

இது குறித்து அரிமண்டபம் கிராம மக்கள் கூறுகையில், ‘ஐந்து ஆண்டுகளுக்கு பின் கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடந்துள்ளது. ஒவ்வொருவருக்கும் பத்து கிலோவிற்கு மேல் மீன்கள் கிடைத்துள்ளது மகிழ்ச்சியை தருகிறது. ஆண்டுதோறும் நல்ல மழை பெய்து விவசாயம் செழிப்பதுடன், மீன்களும் குறையாமல் கிடைக்க இயற்கை அருள வேண்டும்’’ என்றனர்.

Related Stories: