காப்பீடு திட்டத்தில் வராதோர், சிவப்பு ரேசன் அட்டை இல்லாத நோயாளிகளுக்கு உயர் சிகிச்சைக்கு ஏப்.1 முதல் கட்டணம்: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்கு கட்டணம் அறிவித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவக்கல்லூரியை ஒட்டியுள்ள மருத்துவமனையில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தை சேர்ந்த நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வெளி நோயாளிகளாகவும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் உள் நோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், காப்பீடு திட்டத்தில் வராதோர், சிவப்பு ரேஷன் அட்டை இல்லாத நோயாளிகளுக்கு உயர் சோதனைகளுக்கு ஏப்ரல் 1 முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 63 வகையான உயர் சிகிச்சைகளுக்கு ரூ.500 முதல் ரூ.12,000 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு சிவப்பு ரேசன் அட்டையும், வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு மஞ்சள் அட்டையும்  கொடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அவசர சிகிச்சைக்கு வரும் போது மனிதாபிமானத்தோடு அவர்களுக்கு சிகிச்சைகளை அளித்து வந்தார்கள். இந்த நிலையில் சிவப்பு ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் தான் சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய நோயாளிகளுக்கு இந்த அறிவிப்பு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறலாம்.

Related Stories: