சேத்தியாத்தோப்பு: கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பேரூராட்சிக்குட்பட்ட சென்னிநத்தம் கிராமத்தில் கிளாங்காடு அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகின்றது. சென்னிநத்தம், கிளாங்காடு கிராமத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகளும் வசித்து வருகின்றனர். அரசு தொடக்கப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 4 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் பள்ளியின் வகுப்பறை கட்டிடம் இடிந்துவிழும் நிலையில் இருந்து வந்ததால் இடித்து அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்தன்பேரில் கடந்த ஓராண்டுக்கும் முன்பு கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது.
அதன் பின்னர் பள்ளி கட்டிடம் கட்டும் பணியை அதிகாரிகள் துவங்காமல் கிடப்பில் போட்டனர். இதனால் பள்ளியில் மாணவர்களுக்கு போதிய வகுப்பறை இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர். பள்ளி துவங்கி நூற்றாண்டை கடந்து சிறப்பு பெற்ற பள்ளியாகும். பழமைவாய்ந்த இந்த பள்ளியை உயர்நிலைபள்ளியாக தரம் உயர்த்தி புதிய மாடி கட்டிடமாக கட்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
பள்ளி தரம் உயர்த்தப்படும் பட்சத்தில் சுற்றுபுற கிராமத்தில் வசிக்கும் ஏழை மாணவர்கள் தனியார் பள்ளியில் சேர்ந்து கட்டணம் கட்ட முடியாமல் சிரமத்திற்கு ஆளாகாமல் அரசு பள்ளியில் சேர்ந்து பயனைடைவர். எனவே மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பள்ளியை தரம் உயர்த்தி போர் கால அடிப்படையில் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.