ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் ஆவணங்கள் காப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பழமையான ஓலைச்சுவடிகளை அறநிலையத்துறை ஆய்வுக்குழுவினர் கணக்கெடுத்தனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பழமையான ஓலைச்சுவடிகள், நூல்கள், ஏடுகள் அதிகளவில் உள்ளன. இங்கிருந்த செப்பு பட்டயங்கள், கல்வெட்டு படிகள் அனைத்தும் பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு தொல்லியல் துறையினரால் எடுத்துச் செல்லப்பட்டன.
மற்றவை அனைத்தும் கோயில் சமய நூலகம் மற்றும் ஆவண காப்பகத்தில் பாதுகாப்பாக இருந்தன. ராமேஸ்வரம் கோயில் நிர்வாகத்தின் கீழ் ஏற்கனவே இயங்கி வந்த சமய பாடசாலை, சமஸ்கிருத கல்லுரியில் பயன்படுத்தப்பட்ட நூல்கள், ஏடுகள், ஓலைச்சுவடிகள் கோயில் நிர்வாகத்தினால் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை பராமரித்து ஆய்வு செய்யப்பட்டு வந்தன. கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்த அறநிலையத்துறை ஓலைச்சுவடிகள் ஆய்வுக்குழுவினர், ஆவணக் காப்பகத்தில் இருந்த ஓலைச்சுவடிகளை பார்வையிட்டனர்.
தற்போது கோயிலில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இங்குள்ள பழமையான நூல்கள், சுவடிகள் குறித்து அதிகமாக எதுவும் தெரியாத நிலையில் நீண்ட நாட்களாக இவை முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ளன. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்த சுவடி ஆய்வாளர் டாக்டர் தாமரை பாண்டியன் தலைமையில் அறநிலையத்துறையினர், ஓலைச்சுவடிகள் திரட்டு ஆய்வுக்குழுவினர் துணியால் கட்டப்பட்டிருந்த 300க்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளை சுத்தம் செய்து, பராமரித்து வைத்தனர். இந்த சுவடிகளில் 25,500க்கும் மேற்பட்ட ஏடுகள் உள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இவை அனைத்தும் சமயம், மொழி, ஆன்மிகம் மந்திரம், வரலாற்று சாட்சியங்கள், இலக்கியம் சார்ந்ததாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 600 ஆண்டுகள் பழமையான தமிழ், தெலுங்கு, கிரந்தம், தேவநாகரி, வட்டெழுத்துகளில் இந்த ஏடுகள் இருப்பதால் இவற்றை முழுமையாக படித்து விபரங்களை சேகரிப்பதற்காக விரைவில் இதற்கென உள்ள மொழி அறிஞர்கள், ஆய்வாளர்கள் இங்கு வரவுள்ளனர் என கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.