×

இ-சேவை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இ-சேவை மையம் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. படித்த இளைஞர்களையும், தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையிலும், இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை ஏற்படுத்திடவும் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்ஆளுமை முகமையானது, தமிழ்நாடு அரசு கேபில் டிவி நிறுவனம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், மீன்வளத்துறை, கிராமப்புற தொழில் முனைவோர்கள் ஆகிய நிறுவனங்களின் மூலம் இ-சேவை மையங்களை செயல்படுத்தி அரசின் இணையதள சேவைகளை குடிமக்களுக்கான பொது இணையதளம் வாயிலாகவும் வழங்கி வருகின்றது.

இதனை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு மின்ஆளுமை முகமையானது,“அனைவருக்கும் இ-சேவை மையம்”திட்டத்தின் மூலம் அனைத்து குடிமக்களும் இசேவை மையங்கள் தொடங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அனைத்து ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் இசேவை மையங்களை ஏற்படுத்திடவும், மாவட்டங்களில் இசேவை மையங்களின் எண்ணிக்கையினை அதிகரித்து இசேவை மையங்களில் பொது மக்கள் காத்திருக்கும் நேரத்தினை குறைத்து, மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்குவதாகும்.

எனவே விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை அடுத்த மாதம் 14ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். கிராமப்புறங்களில் இசேவை மையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.3000 ஆகும் நகர்ப்புறத்திற்கான கட்டணம் ரூ.6000 ஆகும். விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்களுக்கு உரிய பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் ஆனது விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Apply for setting up e-Service Center: Collector Information
× RELATED கடமலை அருகே கிணறு பைப்லைனை சேதப்படுத்திய யானைகள்