பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா; தீயணைப்பு வாகனங்களில் 45 வீரர்கள் பாதுகாப்பு: டிஎப்ஓ தகவல்

ஈரோடு: பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் விழாவையொட்டி 3 தீயணைப்பு வாகனங்களில் 45 வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் விழா கடந்த 20ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி வருகிற ஏப்ரல் மாதம் 4ம் தேதி நடைபெற உள்ளது. 5ம் தேதி திருவிளக்கு பூஜையும், 6ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், 7ம் தேதி தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. ஏப்ரல் மாதம் 10ம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவு பெற உள்ளது.

இதில், குண்டம் விழாவான ஏப்ரல் 4ம் தேதியன்று ஈரோடு மாவட்டம் மட்டும் அல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பண்ணாரி மாரியம்மன் கோயிலுக்கு வந்து, தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர்.

இதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பிலும், அறநிலையத்துறை சார்பிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், குண்டம் நிகழ்ச்சியில் அசாம்பாவிதங்களை தடுக்கவும், வனத்தை ஒட்டிய இடத்தில் தீ விபத்து நடைபெறாமல் தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 தீயணைப்பு வாகனங்களில் 45 தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இது குறித்து ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலர் (டிஎப்ஓ) புளுகாண்டி கூறியதாவது: பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் விழாவையொட்டி வருகிற ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் 11ம் தேதி வரை 2 தீயணைப்பு வாகனங்கள், ஒரு சிறிய ரக தீயணைப்பு வாகனம் 24 மணி நேரமும் தயார் நிலையில் கோயில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்படும். இதுதவிர 1 சூப்பர் ஜெட் பம்ப் ஆகியவையும் வைக்கப்படும். 45 தீயணைப்பு வீரர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேர பணியில் ஈடுபடுவர்.

குண்டம் விழாவின்போது, மாவட்ட தீயணைப்பு அலுவலரான நானும், உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஆகியோர் நேரடியாக கண்காணிப்பு பணியில் ஈடுபடுவோம். தேவை ஏற்பட்டால் தீயணைப்பு வீரர்கள் கூடுதலாக பணியமர்த்தப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: