குஜராத்தில் இருந்து கால்நடை பண்ணைக்கு மாடு வாங்குவதாக தொழிலதிபர்களிடம் ரூ.5.74 கோடி மோசடி செய்தவர் பிடிபட்டார்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை

சென்னை: தமிழகத்தில் அமையும் கால்நடை பண்ணைக்கு, குஜராத்தில் இருந்து மாடுகளை வாங்கி தொழில் செய்யப்போவதாக தொழிலதிபர்களிடம் ரூ.5.74 கோடி பணம் பெற்று மோசடி செய்து தலைமறைவாக இருந்தவர்களில் ஒருவரை  மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ராமகிருஷ்ணன் புகார் ஒன்று அளித்திருந்தார். அந்த புகாரில், சென்னை கொளத்தூர் விவேக் நகரை சேர்ந்த சுந்தராஜன்(67) அவரது மகன் மகேஷ்குமார் மற்றும் அவர்களின் நண்பர்களான கார்த்திகேயன், மகாலட்சுமி, முத்துக்குமார் ஆகியோர் திருமுல்லைவாயல் காட்டூர் பகுதியில் ஓசன் கீரின்ஸ் லீகசி மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் பால் கம்பெனி நடத்தி வந்தனர். என்னை தொடர்பு கொண்டு, கறவை மாடுகளை வாங்கி பால் தொழில் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார். அதை நம்பி நான் மற்றும் என்னை போன்ற பலர் 5 கோடியே 74 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் முதலீடு ெசய்தோம். ஆனால், அவர்கள் கறவை மாடுகளை குஜராத்தில் இருந்து வாங்கி வந்து தொழில் செய்வதாக கூறினார்.

ஆனால், மாடுகளை வாங்காமல் பணத்தை மோசடி செய்துள்ளனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த 27ம் தேதி சுந்தராஜன் மற்றும் அவரது மகன் மகேஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.  மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அண்ணாநகர் கே.பிளாக் 13வது தெருவை சேர்ந்த முக்கிய குற்றவாளி கார்த்திகேயன்(45) என்பவரை போலீசார் செல்போன் சிக்னல் உதவியுடன் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மகாலட்சுமி, முத்துக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: