×

நீரில்லையேல் உயிர் இல்லை என்பதை உணர்ந்து தண்ணீரை காப்போம்: உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு முதல்வர் வீடியோ பதிவு

சென்னை: நீரில்லையேல் உயிர் இல்லை என்பதை உணர்ந்து தண்ணீரை காப்போம் என உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது: உயிர் வாழ காற்று எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு முக்கியமானது தண்ணீர். இந்த பூவுலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் அடிப்படை ஆதாரம் தண்ணீர். உலகம் எந்த அளவிற்கு உயர்ந்தாலும் மாறினாலும், மாறுதலை அடைந்தாலும் தண்ணீரின் தேவை மாறாது. அதனால்தான் நீரின்றி அமையாது உலகு என்றார் ஐயன் திருவள்ளுவர். தமிழ் நிலமானது தண்ணீரை தனது பண்பாட்டுடன் சேர்த்து வளர்த்து வந்துள்ளது. தண்ணீர் என்று சொல்லாமல் அமிழ்தம் என்று சொன்னவர் திருவள்ளுவர்.

மனித உடலில் நீரின் அளவு கூடினாலும் குறைந்தாலும் நோய் ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார் வள்ளுவர். திருமந்திரமும், தேவாரமும், திருவாசகமும் தண்ணீரின் அவசியத்தை அழகு தமிழில் கூறியுள்ளது. நீர் நிலைகளின் அளவை குறித்து குளம், குட்டை, ஏரி, நீரோடை, ஆறு, அருவி, கடல் என்று பிரித்து பெயர் வைத்தவர்கள் தமிழர்கள். எல்லாமே நீர் உள்ள இடம்தான் என்றாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மை கொண்டது. நீரின் தன்மைக்கேற்ப பெயர் சூட்டிய இனம் தமிழ் இனம். தாயை பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே என்று சொல்வார்கள்.

நமது உடலின் அனைத்து உறுப்புகளும் சரியாக செயல்படுவதற்கு தண்ணீர் மிக மிக அவசியம். உணவின்றி கூட பல நாட்கள் வாழ்ந்து விடலாம் தண்ணீர் இன்றி வாழ முடியாது. இத்தகைய உயிர் நாடியான தண்ணீரை நாம் காக்க வேண்டும். நம்மை காக்கும் தண்ணீரை வீணாக்கக் கூடாது. தண்ணீரை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும், தூய்மையாக வைத்திருக்க வேண்டும், மாசுபடாமல் காக்க வேண்டும். நீர் நிலைகளை தூர்வாரி வைத்திருக்க வேண்டும். இன்றைக்கு ஒரு நாட்டின் வளம் என்பது நீர் வளமாக, இயற்கை வளமாக கணக்கிடப்படும் சூழலுக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். புவி வெப்பமயமாதலில் இருந்து காப்பது தண்ணீர்தான். நீரில்லையேல் உயிர் இல்லை என்பதை உணர்ந்து தண்ணீரை காப்போம்.. தாய் நிலத்தை காப்போம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோவில் பேசியுள்ளார்.

Tags : Chief Minister ,World Water Day , Realizing that without water, there is no life, let's conserve water: Chief Minister's video recording on the occasion of World Water Day
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...