மேகாலயா சட்டப்பேரவையில் இந்தியில் பேசிய கவர்னருக்கு எதிர்ப்பு: 4 எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

ஷில்லாங்: மேகாலயா சட்டப்பேரவையில் இந்தியில் பேசி கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து 4 எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். மேகாலயாவில் நடந்த சட்டசபை தேர்தலில் தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த கன்ராட் சங்மா தலைமையிலான கூட்டணி ஆட்சியை பிடித்தது. இந்த கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் பாகு சவுகான் உரையாற்றினார். அப்போது அவர் இந்தியில் பேசினார்.

அங்கு அலுவல் மொழியாக ஆங்கிலம் உள்ளது. ஆனால் கவர்னர் இந்தியில் பேசியதை எதிர்த்து மேகாலயா சட்டப்பேரவையில்  மக்களின் குரல் கட்சியை சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பினார்கள். அந்த கட்சி தலைவரும், எம்எல்ஏவுமான ஆர்தன் மில்லர் கூறுகையில், ‘ மேகாலயா இந்தி பேசும் மாநிலம் அல்ல. மேலும் அசாம் மொழி எங்கள் மீது திணிக்கப்பட்ட போது மொழி அடிப்படையில் பிரிந்த மாநிலம் தான் மேகாலயா. எனவே எங்களுக்கு புரியும் மொழியில் கவர்னர் பேச வேண்டும்’ என்றார். இதற்கு பதில் அளித்த முதல்வர் கன்ராட் சங்மா,’ கவர்னரால் ஆங்கிலத்தில் உரையை படிக்க முடியாது. ஆனால் கவர்னர் உரை ஆங்கிலத்தில் அச்சடித்து வழங்கப்பட்டுள்ளது. எனவே இதை பிரச்னையாக்க வேண்டாம்’ என்றார். இதை மக்களின் குரல் கட்சி எம்எல்ஏக்கள் ஏற்காமல் 4 பேரும் வெளிநடப்பு செய்தனர்.

Related Stories: