புதுடெல்லி: போலி செய்திகள் சமூகங்களுக்கு இடையே பதற்றத்தை உருவாக்கி, ஜனநாயக மதிப்புகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார். டெல்லியில் நடந்த 16வது ராம்நாத் கோயங்கா விருதுகள் வழங்கும் விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ஜனநாயகத்தை சிறந்த எதிர்காலத்தை நோக்கி இயக்கும் இயந்திரம் பொறுப்பான பத்திரிகை. இந்த டிஜிட்டல் யுகத்தில், பத்திரிகையாளர்கள் துல்லியமாகவும், பாரபட்சமின்றி, பொறுப்புடனும், அச்சமின்றியும் இருப்பது முன்னெப்போதையும் விட முக்கியமானது.
உண்மைக்கும், பொய்க்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க வேண்டும். போலி செய்திகள் சமூகங்களுக்கிடையில் பதற்றங்களை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளன. இதன் மூலம் சகோதரத்துவம் கொண்ட ஜனநாயக மதிப்புகளுக்கு ஆபத்து உள்ளது. பேனா வாளைவிட வலிமையானது. ஆனால் அதிகாரத்திடம் உண்மையைப் பேசவிடாமல் பத்திரிகைகள் தடுக்கப்படும்போது ஜனநாயகத்தின் துடிப்பு சமரசம் செய்யப்படுகிறது. எனவே நாடு ஜனநாயக நாடாக இருக்க வேண்டுமானால் பத்திரிகைகள் சுதந்திரமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.