×

அண்ணாமலையார் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டிய பாஜ மாநில நிர்வாகி கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் அதிகாரிகளை அவதூறாக பேசிய பாஜ மாநில நிர்வாகி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அம்மணி அம்மன் கோபுரம் எதிரில் உள்ள கோயிலுக்கு சொந்தமான இடத்தில், பாஜ ஆன்மிகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு மாநில துணைத் தலைவர் சங்கர், கடந்த 20 ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வந்தார்.  ஆக்கிரமிப்பு இடம் என்பதால் கடந்த 18ம் தேதி அந்த கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. அருகில், பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்த அம்மணி அம்மன் மடமும் இடிக்கப்பட்டது.  இந்து முன்னணி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவிக்கவே பாதியில் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், அம்மணி அம்மன் மடத்தின் இடிபாடுகளின் மீது ஏறி நின்று, கடந்த 19ம் தேதி பாஜ மாநில நிர்வாகி சங்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றிய அதிகாரிகள் மற்றும் போலீசார் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்து மிரட்டலும் விடுத்தனர். இது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார், அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்துக்குள் ஆத்துமீறி நுழைந்து அவதூறாக பேசியதாக வழக்கு பதிந்து தேனி மலை பகுதியை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர்.  அதைத்தொடர்ந்து, பாஜக மாநில நிர்வாகி சங்கரையும் நேற்று இரவு  போலீசார் கைது செய்தனர். மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.

* ஓட்டல் உரிமையாளர் தற்கொலை பா.ஜ. நிர்வாகி மீது வழக்கு நாகர்கோவில் இருளப்பபுரத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (35). இவர் புத்தளம் மெயின் ரோட்டில் ஓட்டல் நடத்தி வந்தார். கடன் பிரச்னையால் நிலத்தை விற்க முயன்றுள்ளார். அதற்கு உறவினர்கள் இடையூறு செய்ததால் நேற்று முன்தினம் ஓட்டலில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில்  குறிப்பிட்டிருந்த உறவினர்களான வக்கீல்கள் ரமேஷ், பிரபு, மற்றும் பாலாஜி, பாஸ்கர், கண்ணன் ஆகிய 5 பேர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக சுசீந்திரம் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதில் ரமேஷ், பாரதிய ஜனதா கட்சியின் ராஜாக்கமங்கலம் கிழக்கு ஒன்றிய பொது செயலாளர் ஆவார்.  



Tags : BJP ,Annamalaiyar , BJP state executive arrested for building house on Annamalaiyar temple land
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...