×

ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பியனுப்பிய நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதாவை மீண்டும் இன்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்கிறார். மசோதா தொடர்பாக ஆளுநர் எழுப்பிய கேள்விகள், அரசின் விளக்கங்களையும் விளக்க முதல்வர் திட்டமிட்டுள்ளார். தமிழ்நாடுசட்டப்பேரவையில் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி, ‘ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழ்நாட்டில் தடை’ விதிக்கும் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு தமிழ்நாடுஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதா குறித்து சில விளக்கங்களை ஆளுநர், தமிழ்நாடு அரசிடம் கேட்டார். அதுகுறித்தும் உடனடியாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் சுமார் 4 மாதங்களுக்கும் மேலாக ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல்  அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 8ம் தேதி அரசுக்கு திருப்பி அனுப்பினார். திருப்பி அனுப்பியதற்கான காரணம் குறித்து ஆளுநர் அளித்துள்ள விளக்கத்தில், ‘ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை  விதிக்கும் சட்டம் இயற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை’ என்று குறிப்பிட்டு இருந்தார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த  9ம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் சட்டம் இயற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு முழு அதிகாரம் உள்ளது. ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை  ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், இந்த சட்ட முன்வடிவை மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்றி ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில்  முடிவு செய்யப்பட்டதாக சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

இந்த சூழ்நிலையில்தான், தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த 20ம் தேதி காலை 10 மணிக்கு கூடியது. அப்போது, 2023-2024ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அப்போது, பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். இதையடுத்து 21ம் தேதி (நேற்று முன்தினம்) 2023-2024ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். நேற்று அரசு விடுமுறை என்பதால் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறவில்லை.

தமிழ்நாடுசட்டப்பேரவை கூட்டம் ஏப்ரல் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று முதல் வருகிற 28ம் தேதி வரை 4 நாட்கள் பொது பட்ஜெட் மற்றும் வேளாண்மை பட்ஜெட் குறித்து விவாதம் நடைபெற்று நிறைவேற்றப்படும். இந்நிலையில், இன்று (23ம் தேதி) சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும், ‘தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதாவை மீண்டும் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார். அப்போது, மசோதா தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்கு, அரசின் விளக்கங்களையும் பேரவையில் முதல்வர் விளக்க திட்டமிட்டுள்ளார்.

அனைத்துக்கட்சி உறுப்பினர்களுடன் இந்த மசோதா மீண்டும் ஒருமனதாக நிறைவேற்ற வாய்ப்புள்ளது. ‘ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உண்டு’ என மக்களவையில் நேற்று முன்தினம் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ள நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான மசோதா தாக்கல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. மசோதா தொடர்பான தமிழ்நாடு ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்கு, அரசின் விளக்கங்களையும் பேரவையில் முதல்வர் விளக்க திட்டமிட்டுள்ளார்.

Tags : Legislative Assembly ,Governor ,RN ,Ravi ,Chief Minister ,M.K.Stal , Online Gambling Prohibition Bill tabled in Legislative Assembly today after Governor RN Ravi sent it back: Chief Minister M.K.Stal's decision
× RELATED சபாநாயகர் அப்பாவு தலைமையில்...